இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி இருக்கும்.. ஆனா வேலை இருக்காது! ராய்டர்ஸ் ஆய்வில் ஷாக்
சென்னை: அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்பது குறித்து 'ராய்டரஸ்' ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தியாவில் வேலையின்மை விகிதம் ஓரளவுக்குத்தான் குறையும் என்று கூறப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் இந்தியாவின் வளர்ச்சி என்பது சமீப காலமாக தொடர் முன்னேற்றத்தில் இருக்கிறது. தற்போது உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்திருக்கிறது. இதற்கிடையில் நாட்டின் மக்கள் தொகை, சீனாவை முந்தியிருக்கிறது. உலகின் மிகவும் அதிக மக்கள் வாழும் நாடாக இந்தியா உருவாகியுள்ளது. இந்த மாற்றம் உற்பத்தி சக்தியை அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும் எனவும் பலரும் கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக 'ராய்டர்ஸ்' செய்தி நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. தற்போது அதன் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதாவது, இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த நிதியாண்டில் நிலையான வளர்ச்சி பெரும். ஆனால் எதிர்பார்ப்பதை விட குறைவாகதான் இருக்கும். இருப்பினும், இந்த வளர்ச்சியானது மற்ற பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகளின் வளர்ச்சியை விட சிறப்பானதாக இருக்கும். தற்போது இந்தியாவின் இலக்கு அடுத்த 25 ஆண்டுகளில் ஜிடிபியில் 8 சதவிகித்ததை எட்டுவதாகும்.
ஆனால் இது கல்வி, உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வந்தால்தான் சாத்தியமாகும். நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.1 சதவிகிதம் வளர்ச்சியடையும். இது மற்ற பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது நல்ல வளர்ச்சிதான். அதேபோல அடுத்த நிதியாண்டில் இது 6.5 சதவிகிதமாக இருக்கும். ஆனால் வேலை வாய்ப்புகள் உருவாக்கத்தில் பெரிய மாற்றங்கள் இருக்காது.
சர்வதேச அளவில் சீனா மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி, பல முதலாளிகளை இந்தியா நோக்கி திருப்பி இருக்கிறது. ஆனாலும் இந்தியாவில் வேலை வாய்ப்புகள் என்பது அடுத்த சில ஆண்டுகளில் சிறிய அளவில்தான் மேம்படும் என்று 25 பொருளாதார வல்லுநர்களில் 17 பேர் கூறியுள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் மாறவில்லை. ஏறத்தாழ அப்படியேதான் இருக்கிறது. இது தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது என DAM கேபிடல் அட்வைசர்ஸின் தலைமைப் பொருளாதார நிபுணர் ராதிகா பிப்லானி கூறியுள்ளார்.
இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு வெளிநாட்டு உற்பத்தியாளர்களை ஈர்க்கும் வகையில், 'வடிவமைக்கப்பட்ட உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் எந்த அளவுக்கு மாற்றம் ஏற்படும் என்று 27 பொருளாதார வல்லுநர்களிடம் கேட்கப்பட்டது. இதற்கு 21 வல்லுநர்கள், "பெரிய மாற்றம் இருக்காது. சாதாரணமான அளவில்தான் வேலை வாய்ப்புகள் உருவாகும்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications