அவங்க வர்றாங்களா? பேசிட்டு இருக்கும் போதே..முக்கிய தலையை தூக்கிய எடப்பாடி! கடுகடுப்பில் TTV தினகரன்
சென்னை: அதிமுகவில் மீண்டும் சசிகலா வருவார் என பேச்சுகள் எழுந்திருக்கும் நிலையில் டிடிவி தினகரன் ஓபிஎஸ் தரப்பு அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கடந்த சில நாட்களாக யூகங்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் டிடிவி தினகரன் தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் நீண்ட காலமாக அவருடன் பயணித்த முக்கிய தலைவர் ஒருவர் எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. சில இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் 3ஆம், 4ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், பல இடங்களில் டெபாசிட்டும் பறிபோனது.

இதனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. சீனியர்கள் மீது எடப்பாடி பழனிசாமியும், சீனியர்கள் எடப்பாடி பழனிசாமி மீதும் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் மீண்டும் ஒரு பிளவு ஏற்படலாம் என கூறப்படுகிறது.
எடப்பாடி தான் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அக்கட்சியை தோல்வியடையச் செய்திருக்கிறார் என அவர் மீது ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய தேர்தலில் அதிமுக படு தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் சசிகலா மீண்டும் அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர காய்களை நகர்த்தி வருகிறார். மேலும் இனியும் பொறுக்க முடியாது, அதிமுகவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென நீண்டதொரு அறிக்கையும் விட்டிருந்தார். இது அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்து இருக்கிறது. தமிழகத்தின் பிரதானமான எதிர்கட்சி சட்டமன்றத்தில் 60 உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக இருந்த போதும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக களத்தில் இறங்காது என அறிவித்திருப்பது அந்த கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

ஆனால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் கருதப்படும் நிலையில் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகள் கூட களத்தை சந்திக்கும் நிலையில் அதிமுக வெளியேறி இருப்பது பேசு பொருளானது. தோல்வி பயம் காரணமாக அதிமுக தேர்தலில் போட்டியிடவில்லை என திமுகவினரும் பாஜகவினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே அதிமுக மீண்டும் ஒன்று பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி இடம் இருந்து பிரிந்து சென்ற சில நிர்வாகிகள் ஓபிஎஸ் சசிகலா டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் டிடிவி தினகரன்-ஓபிஎஸ் தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் முக்கிய தென்மாவட்ட தலைவர் ஒருவரை தட்டி தூக்கி இருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு. ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமமுக மாவட்ட செயலாளரான மண்டபம் முனியசாமி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருப்பது தினகரன் தரப்பை அதிர வைத்துள்ளது.
டிடிவி தினகரனுக்கு நெருக்கமானவரும் விசுவாசம் மிக்க நபருமாக கருதப்பட்ட முனியசாமி அதிமுகவில் இணைந்து இருப்பது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாகி இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த முனியசாமி 2019 சட்டமன்றத் தேர்தலில் அமமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது 63 வயதாகும் மண்டபம் முனியசாமி அதிமுகவில் பல பதவிகளை வகித்திருக்கிறார்.
மண்டபம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர், அதிமுக ஒன்றிய செயலாளர், மூன்று முறை ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த அவர் மண்டபம் ஒன்றிய குழு தலைவராகவும் பதவி வைத்திருக்கிறார். அதற்குப் பிறகு டிடிவி தரப்பு ஆதரவாளராக அறியப்பட்ட அவர் மாவட்ட செயலாளராகவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளராகவும் இருந்தார். இந்த நிலையில் தான் தற்போது அவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்திருக்கிறார். இது டிடிவி தினகரன் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications