சென்னை மாங்காடு அருகே அதிகாலையில் பர்னிச்சர் கம்பெனியில் பயங்கர தீ விபத்து
சென்னை: சென்னையை அடுத்த மாங்காடு அருகே பர்னிச்சர் கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்த உடன் விரைந்து சென்ற சென்னை புறநகர் பகுதி தீயணைப்பு நிலை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
சென்னையை அடுத்த மாங்காடு பகுதி, சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒன்றாகும். இந்த பகுதி விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதிகளில் ஒன்று. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்த பகுதி வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த பகுதியை சுற்றி புதிது புதிதாக ஏராளமான நிறுவனங்கள் வந்த வண்ணம் உள்ளன. மக்கள் தொகை பெருக்கமும் அதிகரித்தபடி உள்ளது.

இந்நிலையில் மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் பெரிய பர்னிச்சர் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ பர்னிச்சர் கம்பெனி முழுவதும் வேகமாக பரவியது. தீ மளமளவென எரிந்ததால், கம்பனி மற்றும் குடோன் வைத்திருந்த சோபா, பெட், கட்டில் தீப்பற்றி எரிந்தது.
இந்த தீ காரணமாக அந்த பகுதி முழுவதும் பெரும் புகை மண்டலமாக மாறியது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்களை அழைத்தனர். இதையடுத்து மதுரவாயல், விருகம்பாக்கம், பூவிருந்தவல்லி ஆகிய இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பர்னிச்சர் கம்பெனி மற்றும் குடோன் வைத்திருந்த சோபா, பெட், கட்டில் என பர்னிச்சர் பொருட்கள் மொத்தமும் தீயில் கருகி சேதம் அடைந்தது. இந்த பயங்கர தீ விபத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள். மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தா அல்லது வேறு காரணமா என்பது விசாரணையின் முடிவில் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications