மயிலாப்பூர் தொழில் அதிபர் வீட்டில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருட்டு.. பெண் சிக்கியது எப்படி?
சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு தொழில் அதிபர் வீட்டில் இருந்து 140 சவரன் தங்கம் காணாமல் போனதாக கடந்த செப்டம்பர் 9ம் தேதி புகார் எழுந்தது. இந்த புகாரை தீவிரமாக விசாரித்த மயிலாப்பூர் போலீசார், வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்படாமல் நகை திருடப்பட்டிருந்ததால், தொழில் அதிபர் தங்கத்துரைக்கு தெரிந்தவர்களே கைவரிசை காட்டியிருக்கலாம் என்பதை உறுதி செய்தனர். இறுதியில் அவரது உறவுக்கார பெண்ணை கைது செய்துள்ளனர்.
தங்க நகைகள், பணம், சொத்து ஆவணங்கள் வைத்திருக்கும் பீரோக்களை கொள்ளையர்கள் மட்டுமே கொள்ளையடிப்பார்கள் என்பது உண்மையில்லை.. அந்த நகை, பணத்தை பார்க்கும் உறவினர்கள், வேலைக்காரர்கள் யார் வேண்டுமானாலும் பண ஆசையால் திடீரென திருடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

எவ்வளவு தான் சம்பளம் கொடுத்தாலும், எவ்வளவு தான்சிறப்பாக கவனித்தாலும், ஒரு சில வேலைக்காரர்கள் திருடுவது நடக்கிறது. அதேபோல் சொந்த வீட்டிலேயே சிலர் பெற்றோர்களுக்கு, மனைவிக்கு, கணவனக்கு தெரியாமல் திருடுவதும் நடக்கிறது. அதேபோல் உறவுக்கார பெண்கள் சிலர் வீட்டில் உள்ள நகைகளை பார்க்கும் போது திருடுவதும் நடக்கிறது. கல்யாண வீடுகளில் பெரும்பாலும் உறவினர்களே நகைகளை திருடும் சம்பவங்கள் நடந்துள்ளன. ஒட்டுமொத்தமாக வீடுகளில் பீரோ உடையாமல் நகைகள் திருடப்படும் சம்பவங்களின் போது, உறவினர்கள் அல்லது வேலைக்காரர்களின் கைவரிசையாகவே இருக்கிறது. அப்படித்தான் மயிலாப்பூரில் நடந்துள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் தங்கத்துரை (52). இவர் சென்னையில் நிலம், வீடு வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் மயிலாப்பூர் அப்பா் சாமி கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். ரியல் எஸ்டேட் பிரமுகரான தங்கத்துரை, கடந்த 9-ந் தேதி தனது வீட்டில் உள்ள பீரோவை திறந்துள்ளார். அங்கு அவர் ஏற்கனவே வைத்திருந்த இருந்த நகை, பணத்தை சரி பார்த்தார். அப்போது அதில் இருந்த 140 பவுன் தங்கநகை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ந்து போனார். யாரோ பீரோவை உடைக்காமல் உள்ளே கைவரிசை காட்டியிருப்பதை கண்டு திடுக்கிட்டவர், உடனடியாக சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையிலான வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
போலீசார் வீட்டிற்கு நேரடியாக வந்து வந்து பார்த்தனர். அங்கு வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்படாமல் நகை திருடப்பட்டிருந்தது. இதையடுத்து ரியல் எஸ்டேட் பிரமுகரான தங்கத்துரை வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் தெரிந்த நபர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் அதிகமானது. அதன் அடிப்படையில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வேலைக்காரர்கள், உறவினர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் வசிக்கும் தங்கத்துரையின் உறவுப்பெண் பிரேமா (47) என்பவர்தான் கைவரிசை காட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். முண்ணுக்கு பின் முரணாக அவரது பேச்சு இருந்ததால் கண்டுபிடித்த போலீசார், அவரிடம் துருவி, துருவி நடத்திய விசாரணைக்கு பின்னர் சிக்கினார். இதையடுத்து பிரோவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 70 பவுன் தங்கநகை மீட்டுள்ளனர். மீதி நகைகள் எங்கு உள்ளது என்று விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications