அறுந்து தொங்கிய காது.. இன்ஸ்டா விளம்பரத்தை நம்பிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்! சென்னையில் ஷாக்
சென்னை: இன்ஸ்டாகிராமில் விளம்பரத்தை பார்த்துவிட்டு காது ஓட்டை அடைக்க சென்ற இளம் பெண்ணுக்கு காது அழுகி பரிபோயுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் அழகு குறிப்பு விளம்பரங்கள் ஏராளமானவை கொட்டி கிடக்கின்றன. இப்படியான ஒரு விளம்பரத்தை பார்த்துதான் சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது காதில் உள்ள ஓட்டையை அடைக்க பியூட்டிஷியன் அகாடெமி சென்றிருக்கிறார். ஆனால் அவர்கள் கொடுத்த மருந்தை எடுத்துக்கொண்டதால் இளம்பெண்ணின் காது அழுகிபோயுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

தனக்கு நேர்ந்த துயரம் குறித்து இளம்பெண் கூறியதாவது, "இன்ஸ்டாகிராமில் விளம்பரத்தை பார்த்துவிட்டு காதில் உள்ள ஓட்டை அடைப்பது தொடர்பான ஒரு நாள் வகுப்பு சென்றேன். நாங்கள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்து வருகிறோம். எங்களுக்கு அலங்காரம் குறித்த கூடுதலாக தெரிந்து கொள்வது அவசியமாக இருக்கிறது. எனவேதான் இந்தை வகுப்பு செல்ல வேண்டியிருந்தது. இதற்காக நாங்கள் ரூ.2,500-ஐ கட்டணமாக கொடுத்திருந்தோம்.
நான் பங்கேற்ற வகுப்பில் மற்றவர்களுக்கு டெமோ காண்பிப்பதற்காக எனது காதில் உள்ள ஓட்டையை அடைகிறேன் என்று கூறி காதில் கிரீம் போல எதையோ தடவி ஓட்டையை அடைத்தனர். ஆனால் ஓட்டை அப்படியேத்தான் இருந்தது. நாட்கள் செல்ல செல்ல காதில் அவர்கள் தடவிய கிரீம் மிகுந்த அரிப்பை ஏற்படுத்தி தீராத வலியையும் உண்டாக்கியது. தொடர்ச்சியாக போன் செய்து பார்த்ததில் எவ்விதமான ரெஸ்பான்ஸ் இல்லாததால் நாங்கள் ஒரு வாரம் கழித்து அவர்களுடைய அகாடமிக்கு சென்று பார்த்தோம்.
அங்கு சென்ற பிறகு காது அழுகிய நிலைமைக்கு வந்துவிட்டது என்று கூறி ஒரு ஆயின்மென்ட் கொடுத்து அதை பயன்படுத்துமாறு கூறினார்கள். அப்பொழுது கூட மருத்துவர்களை சென்று சந்திக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் கொடுத்த கிரீமை பயன்படுத்தியதால் காது முற்றிலுமாக அழுகி அறுந்து விழுந்துவிட்டது. இது குறித்து நாங்கள் விளக்கம் கேட்டபோது, அவர்கள் முறையாக விளக்கம் அளிக்கவில்லை எனவே காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக வந்திருக்கிறோம்.
இந்த பியூட்டி அகாடெமி பெரம்பூரில் இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம். தற்போது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறோம்" என்று கூறியுள்ளனர். இன்ஸ்டாவில் விளம்பரம் பார்த்து காது ஓட்டையை அடைக்க சென்ற இளம் பெண்ணுக்கு காது தனியாக அறுந்து விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்கு பதிந்துள்ள காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளது.
பியூட்டிஷியனாக இருந்தாலும் கூட தான் அலங்காரம் செய்யும் நபருக்கு தோல் சார்ந்த பிரச்னைகள் இருக்கிறதா? என்பது குறித்து முன்கூட்டியே கேட்டு தெரிந்திருக்க வேண்டும் என்பது நிபந்தனை. பியூட்டிபார்லர் வைத்திருக்கும் பலரும் இது குறித்து கேட்பதில்லை என்று குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுகின்றன. இது தோல் நோய்க்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications