A2B: மீண்டும் விவாதிக்கப்படும் 66 ஆண்டுகளுக்கு முந்தைய 'முரளி பிராமணாள் கபே' ஓட்டல் போராட்டம்!
சென்னை: அடையாறு ஆனந்த பவன் (A2B) உரிமையாளர் ஸ்ரீநிவாச ராஜா தமது பேட்டியில் தந்தை பெரியார் குறித்து சுட்டிக்காட்டி பெருமிதத்துடன் பேசியிருந்தது பெரும் விவாதப் பொருளானது. இதனைத் தொடர்ந்து 66 ஆண்டுகளுக்கு முந்தைய முரளி பிராமணாள் கபே ஹோட்டல் முன்பாக தந்தை பெரியார் நடத்திய பிரம்மாண்ட போராட்டமும் நினைவுகூறப்படுகிறது.
அடையாறு ஆனந்த பவன் (A2B) உரிமையாளர் ஸ்ரீநிவாச ராஜா தமது பேட்டியில், உணவகத் தொழிலை தமிழ்நாட்டில் பிராமணர்கள் மட்டுமே நடத்தி வந்தனர். பின்னர் யார் வேண்டுமானாலும் உணவகத் தொழிலை நடத்த முடியும் என்ற நிலையை உருவாக்கியவர் தந்தை பெரியார் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து A2B-ஐ புறக்கணிக்க வேண்டும் என டிரெண்டிங் செய்தனர். இதற்கு எதிராக A2B ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டது.

இந்த நிலையில் திமுக மகளிர் அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் 66 ஆண்டு முன்னர் தந்தை பெரியார் நடத்திய முரளி பிராமணாள் கபே ஓட்டல் போராட்டம் நினைவு கூறப்பட்டுள்ளது. திமுக மகளிர் அணியின் எக்ஸ் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளதாவது: பெரும்பான்மையான உணவகங்களில் பிராமணாள் என்கிற பெயர் நீக்கப்பட்ட நிலையில் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் "முரளி பிராமணாள் கபே" என்ற உணவு விடுதிக்காரர்கள் மட்டும் பெயரை அழிக்க மறுத்தனர்.
எந்தப் போராட்டத்தையும் வன்முறையில் நிறைவேற்றிக் கொள்ள விரும்பாத தந்தை பெரியார் அவர்கள் அந்த உணவு விடுதியின் முன் நாள்தோறும் மாலை நேரத்தில் அமைதியான முறையில் மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்து, அறிவிக்கவும் செய்தார்.

5.5.1957 அன்று ஆரம்பித்த மறியல் போராட்டம் 2.12.1957 அன்று வரை தொடர்ந்தது; இந்தப் போராட்டத்தில் 1010 கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
இறுதியில் முரளி பிராமணாள் கபே உரிமையாளரான பி.கே.வெங்கடேசன் தந்தை பெரியாரிடம் மன்னிப்புக் கோரினார்; பின்னர் முரளி பிராமணாள் கபே என்ற பெயர் முரளி ஐடியல் ஓட்டல் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது! இவ்வாறு திமுக மகளிர் அணியின் எக்ஸ் பக்கத்தில் நினைவு கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
