மொத்தமாக மாறும் ஆதார் அட்டை! கியூஆர் கோடு + போட்டோ மட்டுமே இருக்கும்! அட்ரஸ் இருக்காது.. மத்திய அரசு
சென்னை: ஆதார் கார்டுகளை வைத்து பல்வேறு மோசடிகள் நடைபெறுவதால் அவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை யுஐடிஏஐ எனப்படும் ஆதார் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஆதார் கார்டு எண்கள் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை வைத்து மோசடிகளை முற்றிலும் தடுக்கும் வகையில் விரைவில், மேஜர் அப்டேட் ஒன்று ஆதார் கார்டில் கொண்டு வருவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக ஆதார் ஆணைய அதிகாரி கூறியுள்ளார்.
ஆதார் கார்டு என்பது தவிர்க்க முடியாத அடையாள ஆவணமாக உள்ளது. 12 இலக்க எண்களுடன் புகைப்படம், முகவரி உள்ளிட்ட விவரங்கள் ஆதார் கார்டில் இடம் பெற்றிருக்கும். ஆதார் என்பது ஒரு அடையாள ஆவணம் மட்டுமே எனவும், வயது, இருப்பிட, குடியுரிமை சான்றாக இதை பயன்படுத்த முடியாது என்பதையும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

ஆதார் அடையாள அட்டை
எனினும், அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்களே கேட்கப்படுகிறது. இதனால், ஆதார் அடையாள அட்டை மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. வங்கி கணக்கு தொடங்குவது முதல் பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பது வரை ஆதார் எண்களே முதன்மையானதாக கேட்கிறார்கள். ஐஆர்சிடிசியில் டிக்கெட் எடுக்க கூட ஆதார் இணைப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.
இப்படி மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாக இருக்கக்கூடிய ஆதாரில் உள்ள விவரங்களை வைத்து பல வகையான மோசடிகளும் அரங்கேறுகின்றன. இத்தகைய மோசடிகளை தவிர்ப்பதற்காக பல்வேறு அப்டேட்களை ஆதார் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆதாரில் விரைவில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புகைப்படம், கியூஆர் கோடு மட்டுமே இருக்கும்
இதன்படி, ஆதாரில் இனி புகைப்படம் மற்றும் கியூஆர் கோடு மட்டுமே இருக்கும். ஆதார் எண்கள் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆதார் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி புவனேஷ் குமார் சமீபத்தில் நடைபெற்ற ஆன்லைன் கருத்தரங்கில் கூறியதாவது:-
"ஆதார் கார்டு விவரங்கள் தற்போது அரசு, தனியார் நிறுவனங்கள் சார்பிலும் கோரப்படுகிறது. இதனால், தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு ஆதார் கார்டு விவரங்கள் எளிதாக கிடைக்கின்றன. ஹோட்டல்கள், சிம் கார்டு விற்பனை செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் பொதுமக்களின் ஆதார் கார்டு எண்கள் உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கின்றன. இவற்றை சிலர் தவறாக பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடும் செயல்கள் நடக்கின்றன.
ஆதார் செயலி
எனவே இத்தகைய மோசடிகளை களையும் வகையில் புதிய விதிகள் மற்றும் மாற்றங்கள் அமல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதல்படியாக ஆதார் செயலி அறிமுகமாக இருக்கிறது. எம் ஆதாருக்கு பதிலாக இந்த புதிய செயலி இருக்கும். இந்த செயலி பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பொதுமக்கள் ஆதார் நகலை அளிக்க வேண்டியதில்லை.
ஆதார் ஆப் வழியாக டிஜிட்டல் முறையில் தகவல்களை அளிக்க முடியும். அடுத்த கட்டமாக, ஆதார் கார்டில் போட்டோ மற்றும் கியூஆர் கோடு மட்டுமே அச்சிட்டு வழங்கப்பட உள்ளது. அதாவது ஆதார் அட்டையில் 12 டிஜிட் எண் அச்சிடப்பட்டிருக்காது. கார்டு ஹோல்டர்களின் பெயர் இருக்கும். அட்ரஸ் கண்டிப்பாக இடம் பெறாது.
வரும் டிசம்பர் 1 முதல்
ஆதார் கார்டில் உள்ள கியூஆர் கோடை பிரத்யேக கருவி மற்றும் யுஐடிஏஐ (ஆதார் ஆணையம்) வால் அங்கீகரிக்கப்பட்ட கருவியை கொண்டு ஸ்கேன் செய்தால் தகவல்களை பெற முடியும். இதன் மூலம் ஆதார் கார்டு வழியாக நடைபெறும் மோசடிகள் முற்றிலும் தடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
ஆஃப்லைன் சரிபார்ப்பு நடவடிக்கைகளை குறைக்கும் விதமாக சட்டம் கொண்டு வர பணிகள் நடப்பதாகவும் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி இது பரிசீலைனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் புவனேஷ்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications