விட்டுக் கொடுத்த விஜய்.. ஒத்துக் கொண்ட எடப்பாடி! அதிமுகவில் ஆதவ் அர்ஜுனாவுக்காகவே உருவான புதிய பதவி
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அதிமுகவில் அவர் சேர்வது உறுதியாகி உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அவருக்காகவே புதிய அணியை எடப்பாடி பழனிச்சாமி உருவாக்கி இருக்கிறார். விரைவில் கட்சியில் ஆதவ் அர்ஜுனா இணையும் நிலையில், உடனடியாக அவருக்கு அந்த அணியின் செயலாளர் பொறுப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் களம் தமிழகத்தில் தற்போது சூடாகி வருகிறது. அரசியலில் புதிய வரவாக விஜய் களமிறங்கி இருப்பது ஏற்கனவே இருக்கும் கட்சிகளை பாதிக்குமா அல்லது பலப்படுத்துமா என்பது தெரியவில்லை.

தற்போதைய சூழலில் திமுக தலைமையிலான கூட்டணி அதிமுக தலைமையிலான கூட்டணி பாஜக தலைமையிலான கூட்டணி மக்களவைத் தேர்தலை சந்தித்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணி தொடருமா அல்லது அணிகள் மாறுமா என்பதும் தெரியவில்லை. ஆனால் மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது.
தமிழக அரசியலில் புதிய வரவான விஜயும் கூட்டணி ஆட்சிக்கு சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில் எந்த கட்சியோடு கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதற்கு முன்னதாக ஏற்கனவே களத்தில் இருக்கும் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. கடந்த ஆண்டே திமுக தேர்தல் பணிகளை துவக்கி விட்டது. உதயநிதி ஸ்டாலின், கேஎன் நேரு ஆகியோர் அடங்கிய தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டு, கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதிமுகவும் தற்போது அதற்கான தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளது. திமுக பிரபல தேர்தல் வியூக நிபுணர் ஒருவரை தேர்தல் பணிகளுக்காக ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக சார்பிலும் கடந்த 2021 தேர்தலில் திமுகவுக்காக பணியாற்றிய பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் இணைய போகிறார் என்ற தகவல் புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே திமுகவுக்காக பணியாற்றியவர் ஆதவ் அர்ஜுனா. அவரது ஒன் மைண்ட் இந்தியா நிறுவனம் அதற்கு பிறகு வாய்ஸ் ஆப் காமன் நிறுவனமாக மாற்றப்பட்டது. அப்போது திமுகவுக்காக பிரச்சார வியூகங்கள் வகுக்க பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்ததே நான் தான் என ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து அவருக்கு உடனடியாக துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பல்வேறு விவகாரங்களை மூத்த நிர்வாகிகளுடன் பிணக்கு ஏற்பட்டதால் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார.
பின்னர் கட்சியில் இருந்து விலகிய அவர், நடிகர் விஜய்யின் தவெகவில் இணையப் போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் விதித்த நிபந்தனைகள் சற்று கடினமானதாக இருந்ததால், விஜய் அவரை கட்சியில் சேர்க்கவில்லை. இந்த நிலையில் அதிமுகவில் அவர் இணைவது உறுதியாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை அதோ அர்ஜுனாவுக்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட அளவில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கபடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக பொது செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு என்ற புதிய அணி உருவாக்கப்பட இருப்பதாகவும், விரைவில் அதற்கான நிர்வாகிகள் நியமனம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த அணி உருவாக்கப்பட்டது ஆதவ் அர்ஜுனாவுக்காக தான் எனவும் அதன் செயலாளராக அவர் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தபோதே மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும், இனி பிறப்பால் ஒருவர் முதலமைச்சராக கூடாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை குறிவைத்து பேசியதாக கூறப்படுகிறது. தற்போது அவர் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் நிலையில் அது தொடர்பாக தனது விமர்சனங்களை முன்வைக்க விளையாட்டு மேம்பாட்டு பிரிவு வசதியாக இருக்கும் என்பதால் அதனை எடப்பாடி பழனிச்சாமி இடம் கேட்டு பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர் அதிமுக சீனியர்கள்.












Click it and Unblock the Notifications