அதிரவைத்த ED ரெய்டு: ஆருத்ரா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கியது என்ன?
சென்னை: ஆருத்ரா நிறுவனம் தொடர்புடைய 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் நடத்திய சோதனையில் ரூ.1.50 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.22 லட்சம் பணம், மோசடி தொடர்புடைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த 'ஆருத்ரா கோல்ட் நிறுவனம்' கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களை கவரும் வகையில் பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது. வாடிக்கையாளர்கள் தங்களது நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் அதற்கு 35 ஆயிரம் ரூபாய் பத்து மாதத்திற்கு வட்டி தரப்படும் எனக் கூறி ஆயிரக்கணக்கான மக்களிடம் இருந்து முதலீடுகளை பெற்றனர்.

இப்படியாக பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் இருந்து 2,438 கோடி ரூபாய் வரை பெற்று ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்து அதன் நிர்வாகிகள் தலைமறைவாகினர். இதையடுத்து, பணத்தைப் பறிகொடுத்தவர்கள் புகார் அளித்தனர். இந்த மோசடி தொடர்பாக 40 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, 22 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி ஐக்கிய அரபு அமீரகத்தில் தலைமறைவாக இருப்பதாக தெரியவந்த நிலையில், அவர்களை கைது செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எடுத்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட பல்வேறு நபர்கள், நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோரிடமும் இந்த வழக்கு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
ஆருத்ரா மோசடி சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்த போது சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவர்களும் விசாரணையை தொடங்கினர்.
இந்த நிலையில், ஆருத்ரா கோல்டு நிறுவன நிதி மோசடி தொடர்பாக நேற்று முன்தினம் (நவம்பர் 26) காலை முதல் சென்னை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள இந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஒருவர் வீட்டிலும், ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள முக்கிய நிர்வாகியாக பணியாற்றிய நபர் ஒருவரின் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆருத்ரா நிறுவனம் பல்வேறு வட்டி சலுகைகளை அறிவித்து 1,04,433 பேரிடமிருந்து ரூ.2,438 கோடி வைப்புத் தொகையாகப் பெற்று மோசடி செய்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை பொருளாதார குற்றப்பிரிவு 40 தனி நபர்கள், நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் அமலாக்கத்துறை விசாரணையில், ஆருத்ரா நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் கணக்குகளில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி பரிவர்த்தனைகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் ரூ.10 லட்சத்துக்கு மேல் நடைபெற்ற 1,230 பரிவர்த்தனைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
இதில் பெரும்பாலான பரிவர்த்தனைகள், பொதுமக்களின் வைப்புத் தொகையைத் தனிப்பட்ட மற்றும் வர்த்தகம் அல்லாத நோக்கங்களுக்காக நிறுவனத்தின் பல வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் இதில் ஆருத்ரா நிறுவனத்தின் சில இயக்குநர்கள் பெயரளவிலானவர்கள் என்றும், மோசடியில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் தெரியவந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் சென்னை, காஞ்சிபுரம், மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 21 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.22 லட்சம் பணம், மோசடி தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள், சொத்து உரிமை ஆவணங்கள், நிதிப் பட்டுவாடா மற்றும் பிற முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications