விடாமுயற்சி! லத்தி பிடித்த கையில் ஸ்டெதஸ்கோப்! நீட் தேர்வால் டாக்டராகும் சென்னை போலீஸ்காரர்! செம
சென்னை: சென்னை ஆவடி சிறப்பு காவல் படையில் பணியாற்றிக்கொண்டே நீட் தேர்வில் வென்ற தர்மபுரியை சேர்ந்த போலீஸ்காரர் சிவராஜ் என்பவருக்கு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நீட் தேர்வு மற்றும் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ள 7.5 சதவீத இடஒதுக்கீடு ஆகியவற்றால் அவரது டாக்டர் கனவு நனவாக உள்ளது.
இந்தியாவில் மருத்துவ படிப்பு படிக்க நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ படிப்பு பயில விரும்பும் மாணவ-மாணவிகள் கட்டாயம் நீட் தேர்வில் பாஸாக வேண்டிய சூழல் உள்ளது. இதற்காக தேசிய தேர்வு முகமை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2023ம் ஆண்டுக்கான நீட் தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதாவது மே மாதம் நடந்த நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து 1.50 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பம் செய்து இருந்தனர். இதில் 14 ஆயிரம் பேர் அரசு பள்ளியில் படித்தவர்களாக இருந்தனர். இதையடுத்து விண்ணப்பம் செய்தவர்கள் நீட் தேர்வையும் எழுதி முடித்த நிலையில் ரிசல்ட்டும் வெளியானது.
இந்த நீட் தேர்வில் தமிழகத்தில் இருந்து போலீஸ்காரர் ஒருவர் பாஸான நிலையில் அவருக்கு கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நீட் தேர்வு மற்றும் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் பாஸாகும் மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றால் அவரது டாக்டர் கனவு நனவாக உள்ளது. அவர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது பற்றிய விபரம் வருமாறு:
சென்னை ஆவடி சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் சிவராஜ் (வயது 24). இவர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள முதுகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் மாணிக்கம். தாய் பெய் இன்பவள்ளி. சிவராஜ் பென்னாகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்தார்.
பிளஸ் 2 தேர்வில் அவர் 915 மதிப்பெண்கள் பெற்றார். டாக்டராக வேண்டும் என்ற அவரது கனவுக்கு இந்த மதிப்பெண் போதுமானதாக இல்லை. இதையடுத்து அவர் அறிவியல் கல்லூரியில் சேர்ந்தார். பிஎஸ்சி வேதியியல் படிப்பை முடித்தார். அதன்பிறகு போலீஸ் தேர்வு எழுதி பாஸானார்.
கடந்த 2020ம் ஆண்டு அவர் போலீஸ் பணியில் சேர்ந்தார். ஆவடி ஆவடி சிறப்பு காவல் படையில் அவர் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே தான் நீட் தேர்வு எழுதி டாக்டராக வேண்டும் என அவர் நினைத்தார். இதையடுத்து போலீஸ் பணி செய்து கொண்டே நீட் தேர்வுக்கு அவர் தயாராகி வந்தார்.
கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். ஆனால் அவருக்கு டாக்டர் படிப்பு படிக்கும் வாய்ப்பு அமையவில்லை. அதாவது அவர் நீட் தேர்வில் போதிய மதிப்பெண் பெறவில்லை. அந்த நீட் தேர்வில் அவர் 290 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார். இருப்பினும் மனம் தளராத சிவராஜ் தொடர்ந்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். நடப்பாண்டில் நடந்த நீட் தேர்வில் அவர் பங்கேற்று 400 மதிப்பெண்கள் பெற்றார்.
இவர் அரசு பள்ளியில் படித்தவர் என்பதால் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்காக நடைமுறையில் அரசு பள்ளி மாணவ-மாணவருக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சீட் கிடைத்துள்ளது. அதன்படி சிவராஜ் கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து மருத்துவப்படிப்பை படிக்க உள்ளார். இதன்மூலம் லத்தி பிடித்த கையில் ஸ்டெதஸ்கோப்பை சிவராஜ் பிடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications