‛சனாதனத்தை அவதூறாக பேசினால் தோல்வி தான்’.. பாஜகவை வாழ்த்திய மாஜி கிரிக்கெட் வீரர்! திரும்பும் திமுக
சென்னை: 3 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்துள்ளது. இந்நிலையில் தான் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தோல்வி பற்றி ‛‛சனாதன தர்மத்தை அவதூறாக பேசினால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும்'' எனக்கூறி பாஜக வெற்றிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் வாழ்த்து தெரிவித்து பரபரப்பை கூட்டியுள்ளார்.
மிசோராம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களுக்கு கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்நிலையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மாநிலங்களுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கி நடந்து வருகிறது.

இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தியது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியும், தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சியும் ஆட்சியில் இருந்தது. தற்போது ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதில் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றியின் விளிம்பில் உள்ளது. மாறாக ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக முன்னிலையில் உள்ளது. இந்த 2 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. அதோடு இருமாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது. அதேபோல் மத்திய பிரதேசத்தில் பாஜக இமாலய வெற்றியை நோக்கி சென்றுள்ளது. இதன்மூலம் அங்கு மீண்டும் பாஜக ஆட்சி உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் தான் 4 மாநில தேர்தல் முடிவுகளில் 3 மாநிலங்களில் பாஜக ஜெயித்து ஆட்சியை கைப்பற்ற உள்ளது. இத்தகைய சூழலில் தான் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ‛சனாதன தர்மம் குறித்த விமர்சனம் தான் முக்கிய காரணம் என பாஜகவினர் கூறி வருகின்றனர். அதாவது தமிழக விளையாட்டு துறை அமைச்சரான திமுகவின் உதயநிதி ஸ்டாலின், ‛‛டெங்கு, மலேரியா உள்ளிட்டவற்றை அழிக்க தான் வேண்டும். அதுபோல் தான் சனாதனம்'' என பேசியிருந்தார்.
இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பல போராட்டங்களை நடத்தியது. ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தில் உதயநிதி ஸ்டாலினின் கருத்தை ஆதரிக்கவில்லை. இருப்பினும் எதிர்ப்பும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வந்தது. இந்நிலையில் தான் சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என பொருள்படும்படி பேசிய திமுகவுடன் கூட்டணியில் இருப்பது தான் 3 மாநில தேர்தல் தோல்விக்கும் காரணம் என பாஜகவினர் எக்ஸ் வலைதளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Abusing Sanatana Dharma was bound to have it’s consequences .
— Venkatesh Prasad (@venkateshprasad) December 3, 2023
Many congratulations to the BJP for a landslide victory. Just another testimony of the amazing leadership of Prime Minister @narendramodi ji & @AmitShah & great work by the party cadre at grassroot levels…
இந்நிலையில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் 3 மாநில தேர்தல் வெற்றியையொட்டி பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு சனாதன தர்மத்தை அவதூறாக பேசியது தான் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம் எனக்கூறி பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
சனாதன தர்மத்தை அவதூறாக பேசினால் நிச்சயம் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும். மகத்தான வெற்றியை பெற்றிருக்கும் பாஜகவுக்கு வாழ்த்துகள். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் சிறந்த தலைமைக்கும், அடிமட்ட அளவில் கட்சியின் சிறப்பாக பணி செய்ததற்கும் இது மற்றொரு சான்றாகும்'' என தெரிவித்துள்ளார். இதனை திமுக கவனிக்க தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications