கோயில் நிலத்தால் வந்த சிக்கல்.. பல்லாவரத்தில் 1000 அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அதிரடி முடிவு
சென்னை: சென்னை பல்லாவரம் திருநீர்மலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 1500 வாக்காளர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் குடியிருப்பதால் அந்த நிலத்தை வாங்கவோ விற்பனை செய்யவோ, கடன் பெறவோ தடையில்லா சான்றிதழ் வேண்டும் என சார் பதிவாளர் உத்தரவிட்டுள்ளதால் இந்த முடிவெடுத்துள்ளனர்.
சென்னையில் இடமோ, வீடோ, அல்லது அடுக்குமாடி குடியிருப்போ வாங்கினால், அந்த நிலம் கோயிலுக்கு சொந்தமான நிலமாக இருந்ததா? அல்லது அரசுக்கு சொந்தமான நிலமாக இருந்து பட்டா பெயர் மாறியதா அல்லது நீர் நிலை புறம்போக்காக இருந்து பட்டா பெயர் மாறியதா அல்லது நத்தம் புறம்போக்கா அல்லது என்ன வகையான நிலம் என்பதை கவனமாக பார்த்து வாங்க வேண்டும்.

ஒருவர் பெயரில் பட்டா அல்லது பத்திரம் இருப்பதை வைத்து மட்டும் அந்த நிலத்தை வாங்கிவிடக்கூடாது. அந்த நிலம் கடந்த 50 வருடங்களில் எப்படி இருந்தது. அந்த நிலத்தில் ஏதேனும் வில்லங்கம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.. இல்லாவிட்டால் பெரும் சிக்கலை சந்திக்க வேண்டிய வாய்ப்பு உள்ளது.
சென்னை பல்லாவரம் அருகே திருநீர்மலையில் ஜெயின் ஆல்பின் மெடோஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இந்த குடியிருப்புகள் அடங்கிய நிலத்தில் மொத்தம் 12 சர்வே எண்கள் உள்ளன. இதில் 56, 57,70, 70/1 ஆகிய நான்கு சர்வே எண்களில் உள்ள நிலங்கள் திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இந்த சர்வே எண்களில் உள்ள குடியிருப்புகளை, வாங்கவோ விற்பனை செய்யவோ, கடன் பெறவோ இந்து அறநிலைய துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்றும் மேலும் தடையில்லா சான்று இல்லாமல் பத்திரப்பதிவு செய்யப்படமாட்டாது என்றும் கடந்த ஜூன் மாதம் முதல் பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்தில் அறிவித்துள்ளனர்.
இதனிடையே அந்த குடியிருப்பில் வசித்து வரும் மக்கள் திடீரென அங்கு குடியேறவில்லை.. கடந்த 2012ம் ஆண்டு குடியேறி உள்ளார்கள்.. அங்கு சிஎம்டிஏ அனுமதி பெற்றுத்தான் கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.. அப்போது பத்திரப் பதிவு செய்ய எந்த தடையும் இல்லை அரசு சார்பில் விதிக்கப்படவில்லை.
இந்நிலையில் 2015 சென்னை வெள்ளம் வந்த பின்னர், வீடுகள் எந்த நிலத்தில் இருக்கின்றன என்பதை இந்து அறநிலையத்துறையும், பத்திரப்பதிவு துறையும் கழுகு கண்களுடன் பார்க்க தொடங்கின. அப்படி பல நிலங்களை சென்னையில் அரசு அதிரடியாக பறிமுதல் செய்தது. நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமித்து குடியிருப்போர் எத்தனை வருடங்கள் ஆனாலும் பட்டா பெற முடியாது என்று அரசு அதிரடியாக அறிவித்தது.
தற்போதைய நிலையில் சென்னையில் நிலத்தின் வகையை அறியாமல் கடந்த 20 வருடங்களில் நிலம் அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியோர் சிக்கலை சந்தித்துள்ளனர். நீர் நிலைபுறம்போக்கு மற்றும் அரசு நிலம் மற்றும் இந்து அறநிலையத்துறை நிலம் ஆகியவற்றில் குடியிருப்போர் குடியிருப்பை விற்க முடியாத நிலையில் தவிக்கிறார்கள்..அப்படித்தான் ஜெயின் ஆல்பின் மெடோஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போரும் சிக்கலை சந்தித்துள்ளனர். இங்கு மொத்தம் 952 வீடுகள் உள்ளன. இதில் 700 வீடுகளில் மொத்தம், 3 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். இந்த குடியிருப்பு உள்ள இடம், 16.7 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.
ஜெயின் ஆல்பின் மெடோஸ் குடியிருப்பு அமைந்துள்ள சர்வே எண்களில் , 56, 57,70, 70/1 ஆகிய நான்கு சர்வே எண்களில் உள்ள நிலங்கள் திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது என்று கூறியுள்ள பம்மல் சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள், இந்து அறநிலையத் துறையிடம் அனுமதி பெறாமல், பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்க முடியாது என்று அறிவித்துவிட்டனர்.
இதனால் அந்த குடியிருப்பில் வசித்து வரும் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.. சொந்தமாக வீடு வாங்கி குடியேறிய பிறகும், அகதிகள் போல தவிப்பதாக கவலை தெரிவித்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். மொத்தம் இந்த குடியிருப்பில் 1500 வாக்காளர்கள் குடியிருக்கிறார்கள். வரும் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த குடியிருப்பு வளாகத்தில்உள்ள வீடுகளுக்கு பத்திரப்பதிவு தடையை நீக்க வேண்டும் என்று அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications