"சங்கு ஊதுற வயசுல சங்கீதா".. கண்சிவந்த மகளிர் ஆணையம்.. போலீசுக்கு ஓடிய ஏ.எஸ். குமரி.. சபாஷ் ஆக்ஷன்
சென்னை: பெண்களை தரக்குறைவாக யார் விமர்சித்தாலும், அவர்கள் மீது போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ். குமரி கோரிக்கை வைத்துள்ளார்.. என்ன நடந்தது?
தமிழக மக்களால் கடந்த 2 வருடங்களாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, மிக முக்கிய அறிவிப்பாக மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் மகளிர் உதவித் தொகைக்கு தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்திருந்தார்.

வேதனை வானதி
தமிழகத்தில் 2 கோடிக்கு மேல் ரேஷன் கார்டுகள் இருக்கிறது... ஆனால் அரசோ வெறும் 7 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பதால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று அதிமுக இதுகுறித்து கேள்வியை எழுப்பி வருகிறது.. தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது ஏன்? என்றுதான் புரியவில்லை என்று கேட்கிறார் டிடிவி தினகரன்.. எந்த அடிப்படையில், தகுதியான குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்படுவர் என்று பாஜகவின் மூத்த தலைவர் வானதி சீனிவாசனும் கேட்டு வருகிறார்.

இழி அரசியல்
1000 ரூபாயை எதன் அடிப்படையில் ஒதுக்கீடு செய்வீர்கள் என்று இந்த அனைத்து எதிர்க்கட்சியினரும் கேள்வியை கேட்டு வரும்போது, நாம் தமிழர் கட்சி சீமான் மட்டும், இதைவிட ஒருபடி மேலே போய், "எங்கள் வீட்டு பெண்களுக்கு உரிமை தொகைக்கான தகுதியை நிர்ணயிக்க நீ யார்?" தேர்தல் வாக்குறுதியில் தகுதி என்ற வார்த்தையே இல்லையே ஏன்? என்று கேள்வி வருகிறார்.. இப்படியான விமர்சனங்களும், வாதங்களும், குற்றச்சாட்டுகளும், அரசியல் தளத்தில் வெடித்து வரும்போது, இந்த உரிமைத்தொகை 1000 ரூபாய் அறிவிப்பு என்பதை வைத்து, சோஷியல் மீடியாவில் "இழிஅரசியல்" கையில் எடுக்கப்பட்டுள்ளது.

கவுண்டமணி
1000 ரூபாய் அறிவிப்பை விமர்சிப்பதாக சொல்லி, ஒட்டுமொத்த பெண்களையும், பொதுவெளியில் கொச்சைப்படுத்தும் நாகரீகமற்ற போக்கு கிளம்பி உள்ளது.. அதையொட்டி சில மீம்ஸ்களும் அரங்கேறி வருகின்றன.. அந்தவகையில், ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. கட்டபொம்மன் படத்தில் கவுண்டமணி - செந்தில் இருவரின் காமெடி சீனை வைத்து, அந்த மீம்ஸ் புனையப்பட்டுள்ளது. இந்த படத்தில், மில்லில் வேலை கேட்டு வரும் நடுத்தர வயது பெண்கள் வரிசையாக நிற்க வைத்து, அந்த பெண்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக கேட்டு வருவார் கவுண்டமணி..

சங்கீதா
அப்படி ஒரு பெண்ணின் பெயரைக் கேட்டதும், "சங்கு ஊதுற வயசுல சங்கீதாவா?" என கவுண்டமணி கிண்டல் செய்வார்.. இந்த பெண் என்றில்லை, அங்கு வேலை தேடி வரும் ஒரு திருநங்கையையையும் கிண்டல் செய்வார் கவுண்டமணி.. அத்துடன் அவர்களுக்கு வேலையும் தராமல் துரத்திவிடுவார்.. அதாவது, அத்தகைய பெண்கள் எல்லாம் வேலை செய்ய தகுதியற்றவர்கள் என்பதைபோல அந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கும்... எவ்வளவுதான், அறிவியலும் தொழில்நுட்பமும் மாறினாலும், ஒருவரின் நிறம், வயது, உடல் எடை, தோற்றத்தை வைத்துக் கிண்டல் செய்வதும், தரக்குறைவாக விமர்சிப்பதும் இன்று வரை தொடர்வது வேதனையே..

நிறம்
பிறரின் நிறத்தை, உருவத்தை கிண்டல் செய்வது, மனிதநேயமற்றது.. அறமற்றது.. உருவ கேலி செய்பவர்களும் ஒருவகையில் குற்றவாளிகளே.. நகைச்சுவை என்பது, சிரிப்பை தருகிறதோ இல்லையோ, மனித மாண்பை ஒருபோதும் அவைகள் சிதைத்துவிடக்கூடாது என்பதுதான் நம்முடைய குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக உள்ளது.. தகுதியின் அடிப்படையில் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற திமுக அரசின் அறிவிப்புக்கு, இப்படி ஒரு காமெடி சீனை தொடர்புபடுத்தி, சோஷியர்ல மீடியாவில் ஒருகூட்டம் இழிவுபடுத்தியிருக்கிறது.. இந்த மீம்ஸ் வீடியோவானது, மகளிர் ஆணையம் கண்ணில் பட்டுவிடவும், கொந்தளித்து விட்டது அந்த ஆணையம்.

'சங்கு ஊதுற வயசுல சங்கீதா'
'சங்கு ஊதுற வயசுல சங்கீதா' என தமிழ்நாடு பெண்களைச் சொல்வது கருத்து சுதந்திரம் எனச் சொல்லும் அளவிற்கு கீழ்மை குணம் கொள்ளாதீர்கள் என்று சீறியிருக்கிறது மகளிர் ஆணையம்.. இது தொடர்பாக சைபர் கிரைமில் புகாரும் தரப்பட்டுள்ளது.. பெண்களை கொச்சைப்படுத்தி இவ்வாறு மீம்ஸ் பதிவிடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்துள்ளது.. இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார், இந்த மீம்ஸ் வெளியிட்ட சம்பந்தப்பட்ட அட்மினை அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகிறது.

IT கம்பெனி
இந்நிலையில், நம் "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக, மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ். குமரி, அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.. இதுகுறித்து கேட்டோம்.. அவர் நம்மிடம் சொன்னதாவது: "1000 ரூபாய் உரிமை தொகை வழங்குவது குறித்து யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம்.. விவாதிக்கலாம்.. விமர்சிக்கலாம்.. அதற்காக எல்லா உரிமையும், கருத்தியல் சுதந்திரும் அனைவருக்கும் உண்டு.. ஆனால், ஒட்டுமொத்த பெண்களையும் கீழ்த்தரமாகவும், கொச்சைப்படுத்துவதும் எந்தவகையில் நியாயம்? தகுதி அடிப்படையில் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அரசு சொல்வது, குடும்ப தலைவிகளின் வாழ்வாதார சூழலை வைத்துதான்.. உதாரணத்துக்கு ஒருவர், ஐடி கம்பெனியில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார் என்றால், அந்த பெண்ணுக்கு இந்த 1000 ரூபாய் தர முடியுமா?

ஆக்ஷன்
எத்தனையோ ஏழை பெண்கள், குடும்ப பாரத்தை சுமக்க முடியாமல் தள்ளாடி கொண்டிருக்கும்போது, அவர்களின் வாழ்க்கை தரம், வருமானம் அடிப்படையில் அரசு, இந்த உரிமைத்தொகையை வழங்க நினைக்கிறது.. இதைத்தான் "தகுதி" என்று அரசு சொல்கிறது.. ஆனால், அரசை விமர்சிப்பதாக நினைத்து கொண்டு, ஒட்டுமொத்த பெண்குலத்தை கொச்சைப்படுத்துவதைதான் எங்களால் ஏற்கமுடியவில்லை. அதனால்தான், சைபர் போலீசில் புகார் கொண்டு சென்றோம். அந்த புகாரின்பேரில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.. இனி, பெண்களை தரக்குறைவாக யார் விமர்சித்தாலும் சரி, அவர்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும்" என்கிறார் மகளிர் ஆணைய தலைவர் குமரி விஜயகுமார்..!!!












Click it and Unblock the Notifications