திமுக தான் பாஜகவின் ”பி டீம்”.. உறவும் தேவையில்லை பகையும் தேவையில்லை! மநீம கமல்ஹாசன் ஆவேச பேச்சு..!
சென்னை : மக்கள் நீதி மய்யம் பாரதிய ஜனதா கட்சியின் பி டீம் என்று திமுக விமர்சித்த நிலையில், இப்போது திமுக தான் பி டீமாக செயல்படுகிறார்கள் எனவும், தற்போதைய ஜனநாயகத்தில் ஜனம் தனியாகவும் நாயகம் தனியாகவும் தான் இருக்கிறது என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தேசிய பஞ்சாயத்து ராஜ் நாளையொட்டி இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டு நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்களிடையே உரையாற்றினர்.

மநீமா கமல்ஹாசன்
நிகழ்ச்சியில் பேசிய அவர்," தமிழகத்தில் கிராமசபை கூட்டங்கள் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் மக்கள் நீதி மய்யத்தின் பணி மகத்தானது. இது மக்கள் நீதி மய்யத்துக்கு கிடைத்த வெற்றி தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. கிராமசபை கூட்டங்களில் ஒரு வருடத்திற்கு ஆறு என்று உயர்த்திய தமிழக அரசின் முடிவு பாராட்டத்தக்கது. வரவேற்கத்தக்கது.

கிராமசபை கூட்டங்கள்
கிராமசபை கூட்டங்களில் எண்ணிக்கையை மட்டுமே அதிகரித்தால் போதாது கிராம சபை கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் ஐ செயல்படுத்த வேண்டும் செயல்படுத்தும் தீர்மானங்களை மக்கள் கண்கூடாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் கிராமசபை கூட்டங்களுக்கு முழு வெற்றி கிடைத்ததாக அர்த்தம். இல்லையேல் 6000 கிராமசபை கூட்டங்களில் நடத்தினாலும் எந்த பலனும் கிடைக்காது

உறவும் தேவையில்லை
அரசியல் கட்சிகளிடம் உண்மையாக நாங்கள் எதிர்பார்ப்பது மக்கள் நலன் என்பதை மட்டும் தான். மக்கள் நலன் என்ற பாதையில் இருந்து அரசியல் கட்சிகள் நழுவிவிடக் கூடாது. நான் அரசியலுக்கு வந்ததும், நாம் அரசியலுக்கு வந்ததும் அதற்காகத்தான். அதில் கொஞ்சம் கூட நழுவாமல் மக்கள் நீதி மய்யம் செயல்படுகிறது. சுய நலத்துக்காகவும், ஆதாயங்களுக்காகவும் எடுக்கப்படும் முடிவுகளை விமர்சிப்போம். மாற்றங்களை கொண்டு வந்தால் வரவேற்போம். பாராட்டுவோம். அரசியலில் உறவும் தேவையில்லை. பகையும் தேவையில்லை.
|
பாஜகவின் பி டீம்
மக்கள் நீதி மய்யம் பாஜகவின் பி டீம் என்று திமுக விமர்சித்தது. ஆனால் இப்போது அவர்கள் தான் பி டீமாக செயல்படுகிறார்கள். அன்றாட அரசியலில் எல்லா கருத்துக்களுக்கும் எதர்கருத்துக்களை சொல்லிக் கொண்டிருப்பதே எதிர்கட்சிகளின் வேலை அல்ல. நல்லதை நிச்சயம் பாராட்டுவோம். தவறு செய்தால் தட்டிக்கேட்போம். விமர்சிப்போம். அரசாங்கம் நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுனர் நிறைவேற்றவில்லை. விளையாடி கொண்டிருக்கிறார். அதைப்பற்றி பேச வேண்டாமா என்பீர்கள். இதற்கெல்லாம் என்ன காரணம்? ஜனநாயகம் இருப்பது போல் பிரம்மை தெரிகிறது. ஆனால் ஜனம் தனியாகவும், நாயகம் தனியாகவும் தான் இருக்கிறது." என பேசினார்.












Click it and Unblock the Notifications