எம்ஜிஆர், ஜெயலலிதா மீது பாசம் கொண்டவர்.. என் நண்பரின் மறைவு சினிமாவுக்கு பேரிழப்பு.. ஜெயக்குமார்!
நடிகர் மயில்சாமி உடலுக்கு ஜெயக்குமார் மரியாதை செலுத்தியுள்ளார்.
சென்னை: மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்த நடிகர் மயில்சாமிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தியுள்ளார். மயில்சாமி தனது சிறந்த நண்பர் என்று குறிப்பிட்ட ஜெயக்குமார், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மீது அதீத பாசம் கொண்டவர் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த இவர், முதன்முதலில் மிமிக்கிரி கலையால் பொதுவெளியில் அறியப்பட்டார். 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ள மயில்சாமி, ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்.
அதுமட்டுமல்லாமல் கொரோனா பரவலின் போது ஏராளமான மக்களுக்கு உணவளித்தார். அரசியல் தொடர்பாக பல்வேறு விவாத நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டவர். இவர் திடீர் மாரடைப்பால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே மரணம் அடைந்தார்.

அதிமுக தரப்பில் மரியாதை
நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார். அதேபோல் அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.

சிறந்த நண்பர் மயில்சாமி
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஜெயக்குமார் கூறுகையில், மயில்சாமி எப்போதும் சிறந்த நண்பர், இனிய சகோதரர், சிறந்த பண்பாளர். மயில்சாமியை பொறுத்தவரை 56 வயதில் மறைந்தது துரதிஷ்டம். அவர் திரைப்படங்களில் தோன்றும் போது, அவரின் நடிப்பு நகைச்சுவையாகவும், அனைவரையும் மகிழ்விக்கக் கூடியதாக இருக்கும். தற்போது அவரது மறைவால் ரசிகர்கள் அனைவரும் துயரில் இருக்கிறார்கள்.

எம்ஜிஆர் மீது பாசம்
இளகிய மனம் மட்டுமல்லாமல், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மீது பாசம் கொண்டவர். எப்போது பேசினாலும் இருவரின் புகழை பற்றி பாராட்டி பேசுபவர் மயில்சாமி. அதேபோல் தன்னை நாடி வருபவர்களுக்கு உதவி செய்வதோடு, பசி என்று வயிறாற உணவளித்தவர் தான் மயில்சாமி. படப்பிடிப்புகளில் கூட பசித்தவர்களுக்கு கைகளில் இருந்த பணம் கொடுத்து உணவு சாப்பிட அறிவுறுத்துபவர்.

பேரிழப்பு
அதுதான் மயில்சாமியின் மனம். அவர் இல்லையென்று சொல்லும் போது மனம் வேதனையளிக்கிறது. இது தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு. அவருக்கு நண்பர் என்ற முறையிலும், அதிமுக தரப்பிலும், எடப்பாடி பழனிசாமியின் தரப்பிலும் இறுதி மரியாதை செய்துள்ளேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications