புதுவை சிறுமி கொலை குற்றவாளிகளுக்கு சவுதி அரேபியாவை போல் தண்டனை கொடுக்கணும்.. நிழல்கள் ரவி ஆவேசம்
சென்னை: புதுவை சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என நடிகர் நிழல்கள் ரவி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிழல்கள் ரவி கூறியிருப்பதாவது: 2024 ஆம் ஆண்டு வடக்குப்பட்டி ராமசாமி வெற்றிக்கரமாக ஓடி கொண்டிருக்கிறது. நல்ல அருமையான கதை அம்சம் கொண்டது. மக்கள் அதிக வரவேற்பு தருகிறார்கள். இதைத் தொடர்ந்து 4 அல்லது 5 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்புக்கு செல்கிறேன். பெரிய நடிகர்கள் படம், சிறிய நடிகர்கள் படம் என்பதை விட திரைக்கதைதான் ஒரு படத்திற்கு முக்கியம். கதை நன்றாக இருந்தால் படம் கண்டிப்பாக வெற்றி அடையும்.
புதுவையில் 9 வயசு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். சவுதி அரேபியாவில் கொடுக்கும் தண்டனை போல் இருக்க வேண்டும். அப்போதுதான் திருந்துவார்கள். இவ்வாறு நிழல்கள் ரவி தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவில் பெண்ணை கிண்டல் செய்தாலும் மக்கள் முன்பு நிற்க வைத்து அவருடைய பிறப்புறுப்பு துண்டிக்கப்படும் என கூறப்படுகிறது.
பின்னணி என்ன: புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்த ஓட்டுநருக்கு 9 வயதில் ஒரு மகள் இருந்தார். அவர் அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 2ஆம் தேதி சிறுமி அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அந்த சிறுமியை காணவில்லை. பெற்றோரும் விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும் சிறுமியை இன்னும் காணவில்லை என்பதால் அக்கம்பக்கம் தேடி பார்த்துள்ளனர்.
சிறுமியை காணவில்லை: ஆனாலும் சிறுமி கிடைக்காததால் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த சிறுமி எங்கோ நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
இதையடுத்து ரயில்நிலையம், பேருந்து நிலையம், உள்ளிட்ட இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். ஆனாலும் சிறுமி குறித்து எந்த துப்பும் துலங்கவில்லை. நேற்று முன் தினம் கூட 4 நாட்களாகியும் சிறுமியை கண்டுபிடிக்கவில்லை என கூறி போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இந்த நிலையில் சிறுமியின் வீட்டருக்கே 100 மீட்டர் தொலைவில் ஒரு வாய்க்காலில் சாக்கு மூட்டை ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது. அந்த மூட்டையை திறந்து பார்த்த போது சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அந்த சிறுமியின் உடலை ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது பிரேத பரிசோதனை தெரியவந்தது. இதையடுத்து முதல்வர் ரங்கசாமி கொடுத்த பல்வேறு உத்தரவாதங்களை ஏற்ற பிறகு சிறுமியின் உடலை பெற்றோர் வாங்கிக் கொண்டனர். அவரது உடல் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) சோலை நகரில் உள்ள சிறுமியின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அவருடைய உடலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் என அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் அவருடைய உடல் இன்று ஊர்வலமாக வீட்டிலிருந்து வைத்திக்குப்பம் பாப்பம்மாள் கோயில் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவருடைய உடலை அடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
கயவர்களிடம் சிக்கி சின்னாபின்னமான சிறுமி இனி நீள் துயில் கொள்ள போகும் இடம் இதுதான். சிறுமியுடன் சேர்த்து அவருக்கு பிடித்தமான பொம்மை, புத்தகங்கள் வைக்கப்பட்டு கடந்த 7ஆம் தேதி வைத்திக்குப்பம் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications