தனுஷ்- நயன்தாரா மோதல் இந்தியா பாகிஸ்தான் மேட்ச் போல் ஆர்வமாக இருந்தது! பார்த்திபன் கிண்டல்
புதுவை: தனுஷ்- நயன்தாரா மோதல் இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி போல் ஆர்வமாக இருந்தது என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். அது போல் ஏ.ஆர்.ரகுமான் வீட்டு விவகாரத்தை பெரிதுப்படுத்தியிருக்க கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
புதுவையில் கொரோனா காலத்தின் போது சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை அரசு உயர்த்தியது. இயக்குநர் பாக்யராஜ் , முதல்வரை சந்தித்து கட்டணத்தை குறைக்குமாறு ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

அதன்படி நாளொன்றுக்கு சினிமா படப்பிடிப்பிற்கு 22 ஆயிரத்திலிருந்து 17 ஆயிரம் ரூபாயாகவும் சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 18 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும் குறைத்து முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் புதுவைக்கு வருகை தந்த இயக்குநரும் ,நடிகருமான பார்த்திபன், புதுவை சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து சினிமா படப்பிடிப்பு கட்டணங்கள் குறைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார். மேலும் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பார்த்திபன் கூறுகையில், தனுஷ்- நயன்தாரா மோதல் என்பது இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்ப்பது போன்று ஆர்வமாக இருந்தது. சினிமா துறையில் விவாகரத்து அதிக அளவில் பெருகி வருவதற்கு விவாக வருடம் என்பதை விவாகரத்து வருடமாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
ரகுமான் உலகில் மிகச் சிறந்த மனிதர். அவருடைய குடும்ப விவகாரத்தை யாரும் பெரிதுப்படுத்தி இருக்கக் கூடாது என்பது எனது கருத்து. விஜய் அரசியலுக்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் மாநாடு பிரமாதமாக நடந்தது.
விஜய் அரசியலுக்கு வந்திருப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆளும் கட்சியான திமுகவை விஜய் எதிர்ப்பதுதான் சரியான விஷயம். எம்ஜிஆர் போன்றோர் ஆளும் கட்சியை எதிர்த்துதானே அரசியல் செய்துள்ளார்கள். எனவே ஆளும் கட்சியை எதிர்த்தால்தான் கதாநாயகனாக வர முடியும்.
சினிமாவில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு உள்ளது. எப்போதும் ஆண்கள்தான் பலவீனமானவர்கள், பெண்கள் எப்போதும் வலிமையானவர்கள்தான். பெண்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை. அவர்களே அவர்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள் என்றும் பார்த்திபன் தெரிவித்தார்.
தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை அவர் அனுமதியின்றி விக்னேஷ் சிவன்- நயன்தாரா தங்கள் திருமண ஆவணப்படத்தில் வைத்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனுஷ், ரூ 10 கோடி கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு நயன்தாரா, தனுஷ், தனது அப்பா, அண்ணனால் சினிமாவில் இந்த நிலையில் இருக்கிறார். ஆனால் நான் சுயம்புவாக இந்த சினிமாவில் போராடி இந்த முன்னணி இடத்தை பிடித்துள்ளேன் என நயன்தாரா விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications