நாங்கள் இருக்கும் நிலைக்கு ரூ 2.5 லட்சம் அபராதம் எல்லாம் பெரியத் தொகை.. ரோபோ சங்கர் மனைவி வேதனை
2.5 லட்சம் அபராதத் தொகையை எப்படி செலுத்துவது என தெரியவில்லை- ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா வேதனை
சென்னை: நாங்கள் இருக்கும் நிலையில் ரூ 2.5 லட்சம் அபராத தொகையை எப்படி செலுத்துவது என தெரியவில்லை என்று ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கம், லட்சுமி நகர், 11 ஆவது தெருவில் வசித்து வருபவர் காமெடி நடிகர் ரோபோ சங்கர். இவர் தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் விஜயகாந்த் உள்ளிட்டோர் போல் மிமிக்ரி செய்து புகழடைந்தார்.
விஸ்வாசம், மாரி உள்ளிட்ட படங்களில் ரோபோ சங்கர் நடித்துள்ளார். இவர் அண்மையில் தனது வீட்டில் வளர்க்கும் கிளிகள் குறித்து யூடியூப் வீடியோவில் ஹோம் டூர் என்ற பெயரில் வீடியோ வெளியிட்டிருந்தார். அப்போது அந்த வீடியோவில் இரு கிளிகள் தென்பட்டன.

அலெக்சாண்ட்ரியன் கிளிகள்
அந்த கிளிகள் அலெக்சாண்ட்ரியன் கிளிகள் என பறவைகளை பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு தெரியவந்தது. மேலும் அவற்றை வீடுகளில் வளர்க்க தடை உள்ளதும் அவர்களுக்கு தெரிந்திருந்தது. இதையடுத்து ரோபோ சங்கர் மீது யாரோ வனத்துறைக்கு புகார் அளித்துவிட்டதாக தெரிகிறது.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் 15 ஆம் தேதி ரோபோ சங்கர் வீட்டிற்கு சென்றனர்.

வெளியூர்
அங்கு ரோபோ சங்கர் குறித்து விசாரித்த போது அவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருப்பதாக தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து அவரது வீட்டில் வளர்த்து வந்த 2 கிளிகளையும் கூண்டோடு வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் ரோபோ சங்கர் வந்தவுடன் இந்த கிளிகள் அனுமதியின்றி ஏன் வளர்த்தார் என விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையும் அதிகாரிகள் கூறிவிட்டு சென்றனர்.

2 கிளிகளும் உயிரியல் பூங்காவில் ஒப்படைப்பு
இந்த 2 கிளிகளும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்த கிளிகள் அவருக்கு எப்படி கிடைத்தன என்பது குறித்து அவரது மனைவி இந்த சம்பவத்திற்கு பிறகு அளித்த பேட்டியின் மூலம் தெரியவந்தது. இந்த கிளிகள் ரோபோ சங்கரின் நண்பர் ஒருவர் கொடுத்ததாக தெரிகிறது. அவர் வெளிநாடுக்கு மாற்றலாகி சென்றதால் அந்த கிளிகளை எடுத்து செல்ல முடியாது என்பதால் ரோபோவிடம் கேட்ட போது அவர் தான் வளர்க்க விரும்புவதாக தெரிவித்தாராம்.

3 ஆண்டுகள் கிளிகள் வளர்ப்பு
அதன் பேரில் அந்த கிளியை 3 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்களாம். இந்த கிளிகள் ரோபோவின் மகள் பிகில் படத்தில் நடித்த பிறகு வந்ததால் அதற்கு பிகில், ஏஞ்சல் என்ற பெயர்களை வைத்தனராம். ரோபோவை அந்த கிளிகள் ரோபோ என்றே அழைக்குமாம். அது போல் பிரியங்காவை அம்மா என்றும் அவரது மகளை அக்கா என்றும் அழைக்குமாம்.

வனத்துறை விளக்கம்
இந்த நிலையில் ரோபோ சங்கரிடம் வனத்துறையினர் விளக்கம் கேட்டனர். அவர் அளித்த விளக்கம் வனத்துறையினருக்கு ஏற்புடையதாக இல்லை. அதனால் அவருக்கு ரூ 2.50 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் இது போன்ற வெளிநாட்டு கிளிகளை அடைத்து வைத்து வளர்க்க கூடாது என்றும் அதன் குணமே சுதந்திரமாக சுற்றி திரிவதுதான் என்றும் கூறி விழிப்புணர்வு வீடியோவை வெளியிடுமாறும் ரோபோ சங்கருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து அவரும் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டார்.

அதிக அபராதம்
இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கிப்ட்டாக கொடுத்த கிளிகளை தான் நாங்கள் வளர்த்தோம். எங்கள் மீது தவறில்லை. அதை மறைக்க வேண்டிய எண்ணமும் எங்களுக்கு இல்லை. ஆனாலும் நாங்கள் இருக்கும் நிலைமைக்கு ரூ 2.5 லட்சம் அபராதம் பெரியதுதான். இருந்தாலும் வனத்துறை அவர்களது கடமையை செய்துள்ளனர், நாமும் அரசு விதிகளை கடைப்பிடிப்போம் என வேதனையாக கூறினார்.


Click it and Unblock the Notifications
