விஜய் அரசியலுக்கு வந்தால்? ஹேப்பியாக பதில் அளித்த சரத்குமார்.. கையோடு சொன்னதையும் பாருங்க!
சென்னை: 2026 தேர்தலுக்கு இன்னும் நீண்ட தூரம் உள்ளது என்றும் நாளைக்கு இருப்போமா என்பதை முதலில் பார்ப்போம் என்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் மட்டுமல்ல, யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சி என்றும் சரத்குமார் கூறினார்.
தமிழகத்தில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்வு சென்னை நீலாங்கரையில் நடந்தது.

இந்த விழாவில் நடிகர் விஜய் பேசுகையில், "வருங்கால இந்தியாவின் இளம் நட்சத்திரங்களாகிய உங்களை (மாணவர்கள்) சந்திப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. உங்களை பார்க்கும் போது எனக்கு என்னுடைய பள்ளிப் பருவ காலங்கள்தான் நியாபகத்தில் வந்து போகிறது. நான் ஒரு ஜஸ்ட் பாஸ் மாணவன் மட்டுமே. என்னுடைய கனவு சினிமாதான்.
இந்த விழாவை ஏற்பாடு செய்யக் காரணமே சமீபத்தில் நான் கேட்ட ஒரு படத்தின் (அசுரன்) வசனம் தான். 'காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது'. அதுதான் அந்த வசனம். இது நூற்றுக்கு நூறு உண்மை மற்றும் யதார்த்தம்.
அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது கல்வி. அதற்கு எனது தரப்பில் ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பினேன். அதற்கான நேரம் தான் இது. ஆசிரியர்கள், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் போலி செய்திகள் அதிகம் இருக்கின்றன. பரந்து விரிந்துள்ள சமூக வலைதளம் அதற்குக் காரணம். அதனால் சிந்திக்கும் திறன் நாம் கற்கும் கல்வியைக் கடந்தும் இருக்க வேண்டும். நிறைய படிங்க. அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து படிக்கலாம்.நீங்கள்தான் (மாணவர்கள்) நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க உள்ளீர்கள். பணம் வாங்கிவிட்டு வாக்களிப்பது என்பது, நமது கண்களை நாமே குத்திக் கொள்வது போன்றுதான்.
ஒருவர் ஒரு வாக்குக்காக ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார் என வைத்துக்கொள்வோம். ஒரு தொகுதிக்கு 15 கோடி ரூபாய் செலவழித்தால், அந்த அரசியல்வாதி அதற்கு முன்னாள் எவ்வளவு சம்பாதித்திருக்க வேண்டும்? என்று விஜய் கேள்வி எழுப்பினார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவரும் தங்களது பெற்றோரிடத்தில், இனி பணம் வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்காதீர்கள் என கூறிப் பாருங்கள். நீங்கள் சொன்னால் அது நிச்சயமாக நடைபெறும்.
பணத்தை இழந்தால் அதில் இழப்பு ஏதும் இல்லை. ஆரோக்கியத்தை இழந்தால் ஏதோ ஒன்றை இழக்கிறோம். ஆனால், குணத்தை இழந்தால் அனைத்தையும் இழக்கிறோம். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இவ்வளவு நாள் வரை பெற்றோர் உடன் இருந்து வந்த நீங்கள், படிப்புக்காக வேறு இடத்திற்கு செல்ல வேண்டி இருக்கும். அந்த சுதந்திரத்தை கவனத்துடன் கையாள வேண்டும். நம்முடைய வாழ்க்கை நம் கையில தான் இருக்கிறது" என்று விஜய் கூறினார். நடிகர் விஜய்யின் பேச்சை அனைத்து கட்சியினரும் பாராட்டி வருகிறார்கள். நடிகர் விஜய்யின் பேச்சு தான் இன்றைக்கு தமிழகத்தில் அதிக மக்களால் பகிரப்பட்டு வருகிறது.
இதனிடையே நடிகர் விஜய் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கியது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த சரத்குமார், " நடிகர் விஜய் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செஞ்சுகிட்டுத்தான் இருக்காரு. நடிகர்கள் பலரும் சமுக சேவைகளில் ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். நானே கூட நடிக்க வந்த காலத்தில் இருந்து என்னால் முடிந்த உதவிகளை செய்துகொண்டிருக்கிறேன். அந்த வகையில் அவர் கல்விக்காக உதவி செய்திருக்கிறார். நல்ல விஷயம் தானே... வரவேற்க வேண்டிய விஷயம் என்றார்.
அப்போது செய்தியாளர்கள் " விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா?" என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு பதில் அளித்த சரத்குமார் "நான் ஒரு அரசியல் கட்சி தலைவராக இருக்கிறேன். 2026 தேர்தலுக்கான வியூகத்தை வகுத்துக்கொண்டிருக்கிறேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒவ்வொரு குடிமகனும் அரசியலுக்கு வரவேண்டும் என்று தான் நானும் சொல்கிறேன். இது ஜனநாயக நாடு. ஆக, யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சி" என்று தெரிவித்தார்,
"2026 தேர்தலுக்கான சமத்துவ மக்கள் கட்சியின் முன்னெடுப்பு என்ன?' என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, "2026 தேர்தலுக்கு இன்னும் நீண்ட தூரம் உள்ளது. நாளைக்கு இருப்போமா என்பதை முதலில் பார்ப்போம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications