திமுகவுக்காக களமிறங்கும் சத்யராஜ்... தமிழகம் முழுவதும் பிரச்சார பீரங்கியாக விரைவில் சுற்றுப்பயணம்..!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் திருவிழா இப்போதே களைக் கட்டத் தொடங்கியிருக்கும் சூழலில், பிரச்சாரக் களமும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் திமுகவும், வேல் யாத்திரை என்ற பெயரில் பாஜகவும், சீரமைப்போம் தமிழகத்தை என்ற முழக்கத்துடன் கமல்ஹாசனும் தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டார்கள்.
இந்நிலையில் திமுகவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிஸ்டர் பாரத்
மிஸ்டர் பாரத் திரைப்படத்தில் ரஜினிகாந்தும் சத்யராஜும் எலியும் பூனையுமாக ஒருவரை ஒருவர் எதிர்க்கும் வகையில் என்னமா கண்ணு சவுக்யமா; சொல்லுமா கண்ணு சவுக்யம் தான் என்ற பாடல் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்தப் பாடல் நிஜமானால் எப்படியிருக்கும், அப்படித் தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினிக்கு எதிராக சத்யராஜ் வாய்ஸ் எழுப்பவிருக்கிறார்.

பெரியார் கொள்கை
எந்த வித திட்டமிடலும் இல்லாமல் பொதுத்தொண்டுக்கு வருவது தான் அரசியல் என்றும் திட்டமிட்டு வருவதற்கு பெயர் பிஸினஸ் என்றும் கடந்த வாரம் தான் ரஜினியை தாக்கி பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றி நடிகர் சத்யராஜ் பேசியிருந்தார். இயல்பாகவே பெரியாரிய கொள்கைகளை கடைபிடித்து வரும் சத்யராஜ் இந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்காக பரப்புரை செய்வது குறித்தும் சிந்தித்து வருகிறார்.

திராவிட இயக்கம்
திமுக தரப்பில் இருந்தும் சத்யராஜை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல் இயக்குநர் கரு.பழனியப்பனும் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவரது குடும்பமும் திராவிட இயக்க பாரம்பரியம் கொண்டது. அதோடு திமுக இளைஞரணி நடத்திய பொய்பெட்டி என்ற நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றிருக்கிறார்.

தேர்தல் பரப்புரை
பாஜக மற்றும் அதிமுகவில் ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்கள் உள்ளதால் அதற்கு சற்றும் சளைக்காத வகையில் திமுகவிலும் நட்சத்திரங்களை களமிறங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் திமுக முன்னாள் அமைச்சரின் பேரனும், நடிகருமான நந்தாவும் திமுகவுக்காக தேர்தல் பரப்புரை மேற்கொள்வார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications