மாட்டிறைச்சி எங்கே? நான் என்ன உண்ண வேண்டும் என முடிவு செய்ய நீங்கள் யார்? நடிகர் சத்யராஜ் ஆவேசம்
சென்னை: நான் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதை முடிவு செய்ய நீங்கள் யார் என நடிகர் சத்யராஜ் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் நடிகர் சத்யராஜ் பேசுகையில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என முழுமையாக சொல்லும் போது அந்த பெயர் ரொம்ப அழகாக இருக்கிறது. இதில் விவரம் இல்லாத சில பேர் "என்ன நீங்க தமிழ் தமிழ்னு பேசுறீங்க, ஆனால் ஸ்டாலின்னு இங்கிலீஷ்ல பேரு வச்சிருக்கீங்க" என கேட்கிறார்கள்.

அப்படியே இருந்தாலும் ஸ்டாலின் என்பது இங்கிலீஷ் பெயர் இல்லை, ரஷ்யரின் பெயர். அது ஏன் வைத்தார்கள் என்று கூட சிலர் தெரியாமல் பேசி வருகிறார்கள். ஸ்டாலின் பிறந்த போது பொதுவுடைமை சித்தாந்தம் காரல் மார்க்ஸால் உலகம் முழுவதும் கொண்டு வரப்பட்ட ஒரு தத்துவத்தின் மூலதனம்.
புரட்சி: உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என கூறியதன் மூலமாக ஒரு மிகப்பெரிய புரட்சியும் கிளர்ச்சியும் ஏற்பட்டு ஒரு பொருளாதார சிந்தனையை பொருத்தமட்டில் எல்லாருடைய கொள்கையும் கம்யூனிஸ்ட்தான். ஏழை, பணக்காரன் பிரச்சினை ஒழியனுமா இல்லை ஜாதி பிரச்சினை ஒழியணுமான்னு கேட்டால் நான் முதலில் ஜாதிதான் ஒழியணும்னு சொல்லுவேனுங்க.
ஏழை பணக்காரர்: சரியான வாய்ப்பு கிடைத்தால் ஒரு ஏழை பணக்காரனாகிவிடலாம். ஆனால் என்னதான் வாய்ப்பு கிடைத்தாலும் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்தவர்கள் உயர் ஜாதி இடத்திற்கு வரவே முடியாது. இதை பெரியார் சொல்லியுள்ளார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற பிரச்சினை இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது.
மனிதநேயத்தின் உச்சம்: அப்படியென்றால் எல்லோருடைய பார்வையும் அந்த உயரிய தத்துவத்தை நோக்கியே இருந்தது. மனிதநேயத்தின் உச்சம் மார்க்சீயம் என சொல்லலாம். அப்போதுதான் கருணாநிதிக்கு இரண்டாவது மகன் பிறந்தார். அந்த நேரத்தில் ரஷ்யாவில் மிகப் பெரிய புரட்சி தொடங்கியது லெனின் வந்து ஸ்டாலின் வந்ததால் அவருடைய நினைவாக கருணாநிதி தனது மகனுக்கு ஸ்டாலின் என பெயரிட்டார்.
13 வயதில் திமுக கொடி: அந்த பெயர் வச்சதாலேயோ என்னவோ அவருக்கு தொழிலாளர்கள் மீதுள்ள அக்கறை இன்று வரை உள்ளது. அவருடைய உங்களில் ஒருவன் என்ற புத்தகத்தை நான் படித்தேன். கருணாநிதியின் மகன் என்பதாலேயே அவர் அரசியலுக்கு வந்துவிடவில்லை. 13 வயதிலேயே சைக்கிளில் திமுக கொடியை கட்டிக் கொண்டு தான் அரசியலுக்கு தகுதியானவர் என்பது தனது அப்பாவிடமே நிரூபித்தார்.
நல்ல நண்பர்கள்: எம்ஜிஆரும் கருணாநிதியும் சிறந்த நண்பர்கள். ஒரு முறை காரில் சில எம்எல்ஏக்களுடன் முதல்வராக இருந்த எம்ஜிஆர் சென்று கொண்டிருந்தார். அப்போது யாரோ ஒரு எம்எல்ஏ கருணாநிதி என பெயரிட்டு சொல்லிவிட்டார். உடனே காரை நிறுத்திய எம்ஜிஆர், நானே அவரை பெயர் சொல்லி அழைத்ததில்லை, நீ எப்படி கருணாநிதி என சொல்லலாம், எனவே நடந்தே போ என அனுப்பிவிட்டார்.
காமராஜர் புகைப்படம்: ஒரு முறை சட்டசபையில் முன்னாள் முதல்வர் காமராஜரின் புகைப்படத்தை வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த புகைப்படத்தின் கீழே ஒரு வாசகம் இருந்தால் நன்றாக இருக்கும் என முதல்வராக இருந்த எம்ஜிஆர் விரும்பினார். உடனே தனது உதவியாளரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி ஃப்ரீயாக இருக்கிறாரா என கேட்டு வாருங்கள், நான் அவரை போய் பார்க்கிறேன் என்றாராம்.
இருவருக்கும் சண்டை: இதை கேட்ட கருணாநிதியோ அதெப்படி முதல்வர் என்னை வந்து பார்க்கலாம். நானே போய் பார்க்கிறேன் என இருவரும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். எனவே வடநாட்டில் இருந்து வரும் மதப்புயலை உள்ளே விட்டுவிடக் கூடாது, நமக்குள் இருப்பது (திமுக- அதிமுக) பங்காளிகள் சண்டைதான். அதற்குள் பகையாளிகள் வந்துவிடக் கூடாது. ஏதோ நாம் இன்னிக்கு அடித்துக் கொள்வோம், நாளை கூடிக் கொள்வோம்.
தெறித்து ஓடிய பெண்ணடிமை: பெண்களுக்கு ரூ 1000 உதவித் தொகையை உரிமைத் தொகை என சொல்லும் போதே அங்கு பெண்ணடிமை ஓடி போய்விடுகிறது. மதப்புயல் உள்ளே வரக் கூடாது என நான் ஏன் சொல்கிறேன் தெரியுமா, மும்பையில் ஷூட்டிங் போன போது அங்கு மாட்டிறைச்சியே இல்லை. ஒருவருக்கு என்ன உணவு வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை எனக்கு தானே இருக்க வேண்டும், நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்ய நீங்கள் யார்? என கேள்வி எழுப்பியிருந்தார் சத்யராஜ்.
அவர் மேலும் பேசுகையில் அமைச்சர் சேகர்பாபுவிடம் வடிவேல் ஒரு கோரிக்கையை வைத்தார். அவரது குலதெய்வம் கோயில் அருகே உள்ள சில ஏக்கர் நிலத்தை யாரோ ஆட்டைய போட பார்க்கிறார்கள் என்றார். உடனே போனிலேயே பேசி அதை தடுத்து நிறுத்தினார் சேகர் பாபு. இதனால்தான் அவரை அறநிலையத் துறையின் அரனாக இருப்பவர் என்கிறோம்.
மத அரசியல்: தமிழகத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்யவே முடியாது. எல்லா மதத்தினரும் அண்ணன் தம்பிகள் போல் பழகி வருகிறோம். என்னை போன்ற எந்த மதத்தின் மீதும் நம்பிக்கையில்லாதவர்களும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். ராஜாஜி காலத்தில் சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை இருந்தது.
சமஸ்கிருதத்திற்கும் மருத்துவத்திற்கும் என்னதான் சம்பந்தம். அது போல் தற்போது நீட் வந்துவிட்டது. ஆக மொத்தம் நம் தமிழக குழந்தைகள் மருத்துவம் படிக்கக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார்கள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்று பெரிய அளவில் வந்துவிட்டார்கள். அதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. இவ்வாறு நடிகர் சத்யராஜ் பேசினார்












Click it and Unblock the Notifications