Shine Tom chacko: "அப்பா போய்ட்டாரு!" கையில் கட்டுடன் தாயை தேடி வந்து சொன்ன நடிகர் ஷைன் டாம் சாக்கோ
சென்னை: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே நடந்த சாலை விபத்தில் தனது தந்தை இறந்ததை, தனது தாயிடம் சொல்லி நடிகர் ஷைன் டாம் சாக்கோ கண்ணீர் விட்டு அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் தனது படுக்கையில் இருந்து தனது தாயின் படுக்கையின் அருகே சென்று ஷைன் தெரிவித்ததும் அவர் தாய் அதிர்ச்சி அடைந்தார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் கேரளாவிலிருந்து பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இவருடன் தந்தை சிபி சாக்கோ, தாய், சகோதரர் உள்ளிட்டோர் இருந்தனர்.

காரை டிரைவர் அனீஸ் ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் பாலக்கோடை அடுத்த பாறையூர் அருகில் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரி மீது ஷைன் டாம் சாக்கோவின் கார் விபத்துக்குள்ளானது.
இதில் நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ, ஷைன் சாக்கோ, அவருடைய தாய், சகோதரர், ஓட்டுநர் என அனைவரும் காயமடைந்தனர். இந்த விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
விபத்து நடந்ததும் அப்பகுதியில் இருந்த மக்கள் ஓடி வந்து உதவினர். அவர்களுக்கு ஷைன் டாம் சாக்கோவை யாரென தெரியவில்லை. எனினும் உடனடியாக உதவி செய்தனர். இதையடுத்து போலீஸார் வந்த போதுதான் அவர்கள் யார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஷைன் டாம் உள்பட 5 பேரையும் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது ஷைன் டாம் சாக்கோவின் தந்தை மரணமடைந்திருப்பது தெரியவந்தது.
இந்த தகவலை முதலில் ஷைன் டாமிடமும் அவருடைய சகோதரரிடமும் மருத்துவர்கள் சொன்ன போது அதிர்ச்சி அடைந்தனர். இருவரும் அழுதுக் கொண்டே இருந்தனராம். அவர்களை மருத்துவர்கள் தேற்றினர். இந்த நிலையில் ஷைன் டாமுக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது வார்டில் இருந்த செவிலியரிடம் கேட்டு தனது தாயை பார்க்க ஷைன் துடித்தார். இதையடுத்து அவர் தனது தாயை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. தனது தாயிடம் தத்தி தடுமாறி சென்ற ஷைன், தாய்க்கு எங்கெல்லாம் காயமேற்பட்டுள்ளது என்பதை பார்த்தார்.
பிறகு அவரிடம் அப்பா நம்மை விட்டு போய்விட்டார் என கலங்கியபடியே ஷைன் சொன்னார். அப்போது அவருடைய தாயும் கலங்கி போனார். அவர்களை அங்கிருந்தவர்கள் தேற்றி ஆறுதல்படுத்தினர்.












Click it and Unblock the Notifications