"எம்ஜிஆர் போல இன்னொருவர் வர வாய்ப்பில்லை.." சிவகுமார் திட்டவட்டம்.. பாய்ந்து வரும் விஜய் ரசிகர்கள்
சென்னை: நடிகர் நாட்டை ஆளலாம் என்பதை நிரூபித்தவரே எம்ஜிஆர் தான் என்று நடிகர் சிவக்குமார் புகழாரம் சூட்டியுள்ளார். அதேநேரம் எம்ஜிஆரை போல இன்னொருவர் பிறந்து வரவே முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். அவர் யாரையும் குறிப்பிடவில்லை என்றாலும் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை இது தொடர்பாகப் பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிக முக்கிய ஹீரோவாக வலம் வந்தவர் சிவக்குமார். தமிழில் சுமார் 180க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சிவக்குமார். இப்போது சில ஆண்டுகளாகவே சினிமாவில் நடிக்காமல் தனக்குப் பிடித்த மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகர் சிவக்குமார்
84 வயதிலும் இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் தொடர்ந்து ஆக்டிவாக பல்வேறு விஷயங்களில் செய்து வருகிறார். இப்போதும் அவரது பேச்சைக் கேட்க இளைஞர்கள் ஆர்வமாகவே இருக்கிறார்கள். இதற்கிடையே எம்ஜிஆர் தொடர்பாகவும் அவரது அரசியல் தொடர்பாகவும் நடிகர் சிவக்குமார் கூறியுள்ள சில கருத்துகள் பேசுபொருள் ஆகியுள்ளது.
அதாவது நடிகர் நாடு ஆளலாம் என்பதை நிரூபித்த எம்ஜிஆர் போல இன்னொருவர் பிறக்க வாய்ப்பு இல்லை என்று நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். மிகப் பெரிய நடிகரான சிவக்குமாராலேயே அரசியலில் வெற்றி பெற முடியவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எம்ஜிஆர்
இது தொடர்பாக அவர் மேலும், பேசுகையில், "கடுமையாக உழையுங்கள். இன்னொருவர் உடன் ஒப்பிடத் தேவையில்லை. அனைத்தும் கற்றவர்கள் என்று உலகில் யாருமே இல்லை. நடிகரும் நாடு ஆள முடியும் என்பதை நிரூபித்தவர் எம்ஜிஆர். அவரை போல இன்னொருவர் பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை. (அமெரிக்க மாஜி அதிபர்) ரொனால்ட் ரீகனுக்கு முன்பே நாட்டை ஆண்டவர் எம்ஜிஆர். ஆனால், அவருக்கு வாரிசு இல்லை.
சிவாஜி
உலகிலேயே மிக சிறந்த நடிகர் சிவாஜி. அவரை போல உலகில் வேறு எந்தவொரு நடிகரும் இல்லை. அவரை போல இன்னொரு நடிகர் பிறக்க வாய்ப்பே இல்லை. அப்படிப்பட்ட மிக சிறந்த நடிகரே அரசியலில் தோற்றுவிட்டார். நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா.. அனைத்தும் கற்றவன் என ஒருவன் இல்லவே இல்லை. நீங்கள் உழைத்துக் கொண்டே இருங்கள். கடவுள் என்ன கொடுக்கிறாரோ அதை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள். இன்னொருவரை வைத்து உங்களுடன் ஒப்பிட வேண்டாம்" என்றார்.
விஜய் ரசிகர்கள்
நடிகர் சிவக்குமார் இந்த பேட்டியில் எந்தவொரு நபரையும் குறிப்பிடவில்லை. அவர் பொதுவாகவே பேசியிருந்தார். அதுவும் யாரும் யார் உடனும் ஒப்பிடக்கூடாது என்பதைச் சொல்லவே இதுபோல பேசியிருந்தார். ஆனால், நெட்டிசன்கள் அவர் விஜய்யைத் தான் சொல்வதாகச் சொல்லி வருகிறார்கள். எம்ஜிஆரை போல விஜய் வருவார் என அவரது ஆதரவாளர்கள் சொல்லும் நிலையில், அது தொடர்பாகவே சிவக்குமார் பேசியுள்ளதாகச் சொல்லி வருகிறார்கள். விஜய் ஆதரவாளர்களும் கூட அவரது பேச்சை முழுமையாகக் கேட்காமல்.. அல்லது அவர் சொல்ல வருவதைப் புரிந்து கொள்ளாமல் சிவக்குமாரை விமர்சித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications