பந்தா பண்ணாத நடிகர்.. இயல்பான, தங்கமான மனுஷன்.. டெல்லி கணேஷ் குறித்து நடிகர் சாமிநாதன்
சென்னை: நடிகர் டெல்லி கணேஷ் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், பந்தா பண்ணாத நடிகர், இயல்பான மனிதர், எல்லோரிடமும் அன்பாகவும், கலகலப்பாகவும் பழகக்கூடியவர் என்று நடிகர் சுவாமிநாதன் டெல்லி கணேஷ் குறித்து மனமுடைந்து பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிப்பால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் டெல்லி கணேஷ். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லிகணேஷ் (80) காலமானார். கடந்த 3 நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து, அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன் அவரின் உடல்நிலை மோசமானது.

இந்நிலையில், நேற்று இரவு 9 மணிக்கு உறங்கச் சென்றர் 11.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு தமிழ்நாடு முழுக்க திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி கணேஷ் குறித்து நடிகர் சுவாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லி கணேஷ் மிகப்பெரிய லெஜண்ட். நாங்கள் எல்லாம் சாதாரண கலைஞர்கள். அவரிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஏராளமான விஷயங்கள் உள்ளன. அவர் நடித்த படங்களைப் போட்டு பார்த்தாலே நடிப்பு குறித்த பயிற்சியைப் பெற்றுக் கொள்ளலாம்.
சாதாரணமாக டயலாக்குகளை பேசினால் ஒத்துக் கொள்ள மாட்டார். நம்மை அழைத்து சில ஆக்ஷன்களை எல்லாம் செய்யச் சொல்லி டயலாக் பேச சொல்வார். என்னதான் பிலிம் இன்டஸ்ட்ரி குறித்து படித்திருந்தாலும் இதுபோன்ற அனுபவசாலிகளிடம் இருந்து கற்றுக் கொள்வது வேறு விதமான அனுபவத்தை நமக்கு ஏற்படுத்தும்.
மிகவும் தங்கமான மனிதர். ஒருமுறை அவருடைய வீட்டுக்கு அருகில் எனக்கு ஷூட்டிங் இருந்தபோது, என்னைத் தேடி வந்து காபி கொடுத்தார். ரொம்ப இயல்பான மனிதர். பந்தா செய்யவே மாட்டார்.
நான் என்று இல்லை எல்லோரிடமும் அன்பாகப் பழகக்கூடிய மனிதர். அவருக்கு ஜாதி, மதம் என்ற பேதமே இல்லை. எல்லாருடனம் பிரியமாகப் பழகக் கூடியவர். அவருடைய இறப்பு எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக அவரது சுயசரிதை புத்தக வெளியீட்டின்போது நான் அவரைப் பார்த்தேன். அந்த நிகழ்ச்சியில் என்னை கட்டிப் பிடித்துக் கொண்டார். அந்த புத்தகத்தைப் படித்தவுடன் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. அந்த அளவுக்கு வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். பாலச்சந்திரனின் சிஷ்யர். அவரைப் பற்றி சொல்ல வார்த்தையே இல்லை.
நடிகர் சங்கம் சார்பில் சமீபத்தில் சாதனையாளர் விருது கொடுத்தனர். அப்போது கூட விஜயகுமாருக்கு கொடுக்கும்போது எனக்கும் விருது கொடுத்த மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். அந்த அளவுக்கு எதார்த்தமானவார். அவருக்கு அந்த விருது மிகவும் தாமதமாகத்தான் அந்த விருது வழங்கப்பட்டது. அப்போது கூட அதனை சந்தோஷமாகப் பெற்றுக் கொண்டார்.
அவருக்கு எப்போதோ விருது கொடுத்து கெளரப்படுத்தியிருக்க வேண்டும். இருப்பினும் விருது கொடுத்த நடிகர் சங்கத்துக்கு வாழ்த்துகள். எப்போதுமே காமெடியான விஷயங்களை மட்டும்தான் பேசுவார். எப்போதுமே சீரியஸானதை பேசவே மாட்டார். வாழ்க்கையில் ஹாப்பியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். என்னடா கொண்டு போகப்போறோம் ஜாலியாக இருக்கனும் என்று கூறுவார்.
டிவி, ரேடியோ, திரைப்படம் என அனைத்தின் வழியாகவும் மக்கள் மனதில் இடம்பிடித்தவர். அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications