Thadi Balaji: தாடி பாலாஜிக்கு அடித்தது யோகம்! மார்டின் மகன் கட்சியில் ஆதவ் அர்ஜுனாவுக்கு இணையான பதவி!
சென்னை: தவெகவில் இருந்து விலகி, லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்த நடிகர் தாடி பாலாஜிக்கு, ஆதவ் அர்ஜுனாவுக்கு இணையான பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் பிரச்சார பொதுச் செயலாளரே தாடி பாலாஜிதான். இதனால் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
நகைச்சுவை நடிகர், விஜய் டிவி கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் ஜட்ஜாக இருந்த தாடி பாலாஜி, விஜய் தொடங்கிய தவெகவில் இணைந்து பணியாற்றி வந்தார்.

அவ்வப்போது தவெகவினர் செயல்படுத்தும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு சென்று அவர்களை சிறப்பித்தும் வந்தார். இந்த நிலையில்தான் தனக்கு பதவியே கொடுக்கவில்லை என குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
மேலும் விஜய்யை புஸ்ஸி ஆனந்த் நெருங்கக் கூட விடவில்லை என தாடி பாலாஜி குற்றம்சாட்டினார். இந்த நிலையில் கட்சியில் இருந்து விலகியே இருந்த தாடி பாலாஜி, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான போது அங்கு சென்று மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜய்யை புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் தவறாக வழிநடத்துகிறார்கள்.
இந்த சம்பவத்தால் விஜய் எந்த மாதிரியான மனநிலையில் இருப்பார் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். முக்கியமாக நான் கரூருக்கு வந்ததற்கு காரணமே விஜய்க்காகதான். இப்படி நடக்கும் என்று விஜய் நினைத்திருக்கமாட்டார். உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
விஜய் மீது நான் குற்றம் சொல்லவே மாட்டேன். இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் காரணம். விஜய் இவர்களை நம்பி வருகிறார். மக்கள் விஜயை நம்பிவருகிறார்கள். அப்படியென்றால் இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் பொறுப்பு. என்.ஆனந்த் ,நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோரே தலைவர் விஜயை தவறாக வழி நடத்துகின்றனர். இவ்வாறு தெரிவித்திருந்தார்.
கட்சியில் சேர்ந்ததும், இடது பக்க மார்பில் விஜய்யின் படத்தை டாட்டூவாக போட்டுக் கொண்டார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இளைஞர்களை இப்படித்தான் தவறாக வழிநடத்துவதா என்று!
லட்சிய ஜனநாயக கட்சியின் இணை பொருளாளராக அயூப் கான்; பரப்புரைப் பொதுச்செயலாளராக நடிகர் தாடி பாலாஜி, ஏம்பலம் தொகுதியின் மூத்த ஆலோசகராக வீரமுத்து, மங்கலம் தொகுதியின் மூத்த ஆலோசகராக மோகன், அரியாங்குப்பம் தொகுதியின் மூத்த ஆலோசகராக வழக்கறிஞர் ராமலிங்கம் ஆகியோரை நியமித்து அறிவிப்பினை… pic.twitter.com/MnBIuywcw0
— Jose Charles Martin (@sscharles) January 25, 2026
இந்த நிலையில் விஜய் எப்படியும் தனது அதிருப்தியை அறிந்து தன்னை அழைத்து பேசுவார் என காத்திருந்தார் தாடி பாலாஜி. ஆனால் அவர் அவ்வாறு அழைத்து பேசவே இல்லை. இந்த நிலையில்தான் ஆதவ் அர்ஜுனன் மைத்துநரும் மார்டினின் மகனுமான ஜோஸ் சார்லஸ் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கினார்.
இந்த நிலையில் அண்மையில் தாடி பாலாஜி ஜோஸ் சார்லஸை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் அந்த கட்சிக்கான நிர்வாகிகள் பெயரை அறிவித்த போது தாடி பாலாஜிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு பரப்புரை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த பதவி கிட்டதட்ட தவெகவில் ஆதவ் அர்ஜுனா வகிக்கும் தேர்தல் பிரச்சார பொதுச் செயலாளர் பதவிக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications