“பணத்துக்காக எதுவும் பண்ணுவீங்க..” கடுப்பான ரசிகர்! மக்கள் ரம்மி ஆட மாட்டார்கள் என சமாளித்த நடிகர்
மக்கள் தன்னைப் பார்த்து ரம்மி விளையாட மாட்டார்கள் என்று ரம்மி விளம்பரத்தில் நடித்த துணை நடிகர் வட்சன் தெரிவித்து உள்ளார்.
சென்னை: மக்கள் தன்னைப் பார்த்து ரம்மி விளையாட மாட்டார்கள் என்றும், தான் அந்த இடத்தை அடையும் போது அப்படி விளம்பரம் செய்ய மாட்டேன். என்றும், இனி அந்த தவறு நடக்காது எனவும் ரம்மி விளம்பரத்தில் நடித்த துணை நடிகர் வட்சன் தெரிவித்து உள்ளார்.
தொழில்நுட்பம் வளர வளர மக்களின் ஸ்மார்ட் போன் பயன்பாடும் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் ஸ்மார்ட் போனுக்காக பெரும் பகுதி நேரத்தை மக்கள் செலவழித்து வந்தனர். ஸ்மார்ட் போன் வருகையால் டிஜிட்டல் பணவர்த்தனை மூலம் பல மோசடிகளை தடுத்து நிறுத்த முடியும் என்று கூறப்பட்டது.
ஆனால், நிலைமை தலைகீழாக மாறி ஸ்மார்ட் போன்கள் மூலம் மக்களிடம் பணம் பறிக்கும் கும்பல்களின் எண்ணிக்கை பெருகிறது. ஆன்லைனில் பணம் சம்பாதிக்க எளிய வழி என்ற பெயரில் தொடர்ந்து மோசடிகள் அரங்கேறின. மக்களும் அவர்களின் வலையில் விழத் தொடங்கினார்கள்.

நடிகர்களின் ஆசை வார்த்தை
குறிப்பாக இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ரம்மி என்ற பெயரில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் பயன்பாடு அதிகரித்தன. ஊரடங்கால் வேலையிழந்து வருமானம் இன்றி வாடிய மக்கள் தொலைக்காட்சிகள், செல்போன்களில் வரும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்த நடிகர்களின் பேச்சை கேட்டு அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று நம்பி அதை விளையாட தொடங்கினார்கள்.

சூதாட்ட மோசடி
விளையாட தொடங்கியவுடன் சிறிய தொகையை பரிசாக வழங்குவதைபோல் வழங்கி மக்களின் நம்பிக்கையை பெற்றன ஆன்லைன் சூதாட்ட செயலிகள். இதனால் கூடுதல் நம்பிக்கை பெறும் மக்கள் பெரும் தொகையை கொடுத்து ஆன்லைன் ரம்மியில் விளையாடியவுடன் அவர்கள் தோற்றதாக அறிவித்து பெரிய தொகையை எடுத்துக்கொள்வதாக புகார் எழுந்தது.

மக்களுக்கு இழப்பு
இது நல்ல யோசனையாக இருக்கிறதே என்று எண்ணிய நிறுவனர்கள் பல பெயர்களின் ஆன்லைன் சூதாட்ட செயலிகளை அறிமுகம் செய்தன. விளம்பரத்தில் நடித்த நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் லட்சம், கோடிகள் என பெரும் தொகையை சம்பளமாக பெற்றுக்கொண்டு செல்ல, அதனை பதிவிறக்கம் செய்த மக்கள் பெரும் தொகையை பறிகொடுக்கத் தொடங்கினர்.

தொடர் தற்கொலைகள்
வட்டிக்கு கடன் வாங்கி ஆன்லைனில் சூதாட்டம் விளையாடிய பலர் பணத்தை இழந்து பெரும் நெருக்கடிக்கு ஆளாகினர். இதனால் விரக்தியடைந்தவர்கள் அடுத்தடுத்து தற்கொலை என்னும் துயர முடிவை தேடினர். காவல்துறையை சேர்ந்தவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், குடும்ப தலைவிகள் என பல்வேறு தரப்பட்ட மக்கள் இதில் அடங்குவார்கள்.

காலாவதியாகும் சட்டம்
இந்தஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்தை திமுக அரசு தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றியது. இந்த சட்டம் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் ஒப்புதல் அளிக்காமலேயே கடந்த நவம்பர் மாதம் இச்சட்டம் காலாவதியானது.

நடிகர் சரத்குமார்
இந்த ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்த சரத்குமாருக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அரசு இதை தடை செய்தால் நடிக்க மாட்டேன் என்றும், தான் சொல்வதை மக்கள் கேட்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். இதற்கிடையே வில்லன் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் துணை நடிகராக நடித்து உள்ள வட்சனும் ரம்மி சர்கிள் என்ற ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்து உள்ளார்.

துணை நடிகருக்கு எதிர்ப்பு
இதை ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர், "ரம்மியை விளையாட்டால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த பிறகும் அதற்கு விளம்பரம் செய்வது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? எவன் குடும்பம் எப்படி சீரழிந்தா நமக்கு என்ன? நம்ம பொழைக்க பணம் வேணும், பணத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவோம் அப்படித்தானே?" என்று கடினமான வார்த்தைகளால் சாடி இருந்தார்.

நடிகர் வட்சன் விளக்கம்
இதற்கு ட்விட்டரில் பதிலளித்து இருக்கும் துணை நடிகர் வட்சன், "வணக்கம் நடிப்பு என் தொழில். மக்கள் என்னைப் பார்த்து ரம்மி விளையாட மாட்டார்கள். நான் அந்த இடத்தை அடையும் போது அப்படி விளம்பரம் செய்ய மாட்டேன். அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி." என்று குறிப்பிட்டு உள்ளார். இதற்கு ஒரு நெட்டிசன் எப்படி இருந்தாலும் நீங்கள் சொல்வதை சிலர் கேட்பார்கள் என்று சொன்னபோது, "இனிமேல் தவறு நடக்காது" என்று வட்சன் பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications