இரிடியம் மோசடியில் சிக்கியது எப்படி?.. நடிகர் விக்னேஷ் சொல்லும் அந்த விஐபி யார்?
சென்னை: இரிடியம் மோசடியில் ஈடுபட்ட ராம்பிரபுவுடன் விஐபி ஒருவர் இருந்ததாக நடிகர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். அந்த விஐபி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கிழக்கு சீமையிலே, பசும்பொன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் விக்னேஷ். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகாரை கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருக்கையில் கிழக்கு சீமையிலே, பசும்பொன் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நான் நடித்துள்ளேன். 30 ஆண்டுகள் சினிமாவிலும், அதன் பிறகு சொந்தமாகவும் தொழில் செய்கிறேன். எனது பியூட்டி பார்லர் கடைக்கு வாடிக்கையாளராக வந்த ராம்பிரபு என்பவர் என்னிடம் நட்பு ரீதியில் பழகினார்.

கைத் துப்பாக்கி
அவருடன் கைத்துப்பாக்கி வைத்திருந்த பாதுகாப்பு அதிகாரிகள் சஃபாரி உடையில் இருப்பார்கள். சைரன் கருவி பொருத்திய காரில் தான் அவர் உலா வருவார். இதனால் அவர் ஒரு வி.ஐ.பி.யாக இருக்கலாம் என்று நினைத்தேன். துப்பாக்கி பாதுகாப்பு ஏன்? எனக் கேட்டதற்கு இரிடியம் என்ற பொருள் தனக்கு கிடைத்ததாகவும், அந்த பொருளை மத்திய அரசு உதவியுடன், ஆஸ்திரேலியாவில் உள்ள கம்பெனிக்கு விற்பதாகவும், அதன் மதிப்பு ரூ.3 லட்சம் கோடி என்றும் கூறினார்.

மத்திய அரசு பாதுகாப்பு
இதனால் தான் எனக்கு மத்திய அரசு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளது, என்றும் ராம்பிரபு கூறினார். மேலும் இரிடியம் விற்கும் தொழிலை சட்டப்பூர்வமாக செய்வதாக சொன்னார். இது சம்பந்தமாக சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றிலும், விருதுநகர் பகுதியில் உள்ள பண்ணை வீடு ஒன்றிலும் நடந்த கூட்டங்களில் நான் கலந்து கொண்டேன். அதில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் பங்கு பெற்றனர். இதனால் ராம்பிரபு சொன்னதை உண்மை என்று நான் நம்பினேன்.

5 லட்சம் கொடுத்தால் ரூ 500 கோடி
என்னிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால்,ரூ.500 கோடியாக உங்களுக்கு திருப்பி தருகிறேன் என்றும் நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினார். ராம்பிரபுவின் பேச்சை நம்பி நான் எனது வங்கி கணக்கு மூலமாகவும், நண்பர்களிடம் கடனாக பெற்றும், ரூ.1.81 கோடி கொடுத்தேன். அதற்கு பிறகு அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்தார். ஒரு முறை நேரில் சந்தித்த போது, ரூ.500 கோடி கண்டெய்னர் லாரி மூலம் வருகிறது என்றும், வந்தவுடன் தருவதாகவும் சொன்னார்.

சிறையில் ராம்பிரபு
என்னைப் போல நிறைய பேர்களிடம் அவர் இதுபோல் பணம் வசூலித்திருப்பது தெரிய வந்தது. யாருக்கும் சொன்னபடி பணம் கொடுக்கவில்லை என்பதும், அவர் மோசடி பேர்வழி என்றும் தகவல் வந்தது. இதற்கிடையில் மோசடி வழக்கில் விருதுநகர் போலீசார் ராம்பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பணமோசடி
மேலும் என்னைப் போல 500 முதல் 600 பேர்களிடம் ராம்பிரபு பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அறிகிறேன். அவர் மீதும்,அவருடன் இருப்பவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு புகார் மனுவில் நடிகர் விக்னேஷ் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து நடிகர் விக்னேஷ் அளித்த பேட்டியில் இரிடியம் தொழிலில் என்னை ராம் பிரபு முதலீடு செய்ய சொன்னார். இதையடுத்து அவர் குறித்து விசாரித்த போது வந்த தகவல்கள் எல்லாம் நம்பும்படியாகவே இருந்தது. எனினும் எனக்கு அவர் மீது நம்பிக்கையில்லாத நிலை இருந்தது. இதனால் அவர் என்னை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அழைத்தார். அங்கு சென்ற போது ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி என ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது மட்டுமல்லாமல் ஒரு விஐபி இருந்ததையும் பார்த்தேன். இதனால் அவரை நம்பி எனது பணம் 21 லட்ச ரூபாயும் எனது நண்பர்களிடம் இருந்து கடனாக பெற்றும் மொத்தம் 1.81 கோடி பணம் கொடுத்தேன். இதெல்லாம் 2016 இல் நடந்தது. கடன் கொடுத்தவர்கள் என்னை நெருக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால்தான் புகார் அளித்துள்ளேன். வீட்டிலும் எனக்கு நிம்மதி இல்லை என்றார். விக்னேஷ் சொன்ன விஐபி குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications