திமுக- பாஜக மறைமுக உறவு.. ஒரே டோனில் பேசும் எடப்பாடி பழனிசாமி, விஜய்!
சென்னை: திமுகவும் பாஜகவும் மறைமுக உறவு வைத்திருப்பதாக அண்ணா திமுக ஏற்கனவே சொல்லி வருவதையே தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கூறியிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் 2026 சட்டசபை தேர்தலில் வலிமையான கூட்டணியை உருவாக்கி அதிமுக ஆட்சியைக் கைப்பற்றும் என்றார் எடப்பாடி பழனிசாமி.
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுக- பாஜக மறைமுக உறவு: திமுகவும் பாஜகவும் அண்டர்கிரவுண்ட்டில் கூட்டணி வைப்பதாக நடிகர் விஜய் கூறியிருப்பதை ஏற்கனவே நாங்கள் சொல்லியிருந்தோம். இப்போது எல்லோரும் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். திமுக- பாஜக இடையே மறைமுக டீலிங் இருப்பதை அனைத்து கட்சிகளும் சொல்ல தொடங்கிவிட்டனர். திமுக- பாஜக மறைமுக உறவு இருக்கிறது என நாங்கள் சொல்லிக் கொண்டிருந்தோம். இப்போது மற்றவர்களும் சொல்கின்றனர்.
விஜய்யால் ஈர்க்க முடியாது: அண்ணா திமுகவின் வாக்குகளை நடிகர் விஜய் உட்பட யாராலும் ஈர்க்க முடியாது. எம்ஜிஆரைப் பற்றி எல்லோரும்தான் பேசுகிறார்கள்.. எம்ஜிஆர் பெயரை சொன்னால்தான் கட்சியை நடத்த முடியும் என்ற நிலை இருக்கிறது. அந்த அளவுக்கு எங்கள் அண்ணா திமுக கட்சியின் தலைவர்கள் வாழ்ந்தார்கள்; வாழ்நாளில் நிறைய திட்டங்களைக் கொண்டு வந்தனர். மக்களிடத்திலேயே மிகப் பெரிய ஈர்ப்பு இருக்கிறது. அதனால்தான் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை பின்பற்றி, வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும் என நினைக்கின்றனர்.
நமக்கு அதிகாரம் இல்லையே: திராவிடமும் தமிழ்த் தேசியமும் தமது இரு கண்கள் என தன்னுடைய கொள்கையை நடிகர் விஜய் பேசியிருக்கிறார். அதை நாங்கள் ஏற்காததும் வேற. ஒவ்வொரு கட்சிக்கும் இருக்கிற கொள்கை அடிப்படையில் அவர்கள் செயல்படுகின்றனர். அந்த கட்சியின் தலைவர்கள் கருத்து சரியா? தவறா? என தீர்மானிக்கிற அதிகாரம் நமக்கு கிடையாது. ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவருக்கும் ஒரு கொள்கை, பார்வை உள்ளது. அதிமுக பொன்விழா கண்ட கட்சி. நாங்கள் ஏற்கனவே என்ன கொள்கையைக் கடைபிடித்தோமோ அதையஏ கடைபிடிப்போம்.
நீக்கப்பட்டவர்கள்தான்: அண்ணா திமுகவில் இருந்து யாரும் பிரிந்து போகவில்லை. அவர்கள் அண்ணா திமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள்தான். அவர்களைப் பற்றி பத்திரிகையாளர்கள் திருப்பி திருப்பி கேள்வி கேட்பதையே நிறுத்திவிடுங்கள் என அன்புடன் கெஎட்டுக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டவர்கள்தான். கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவர்கள் மீது எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
எம்ஜிஆர் பெயரை சொன்ன விஜய்: எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டியவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா. ஆகையால் நல்லவர்களை முன்னிறுத்துவதில் எந்த தவறும் இல்லை. அதற்கு ஒரு கலர் கற்பிக்க வேண்டாம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நல்ல தலைவர்களை பின்பற்றுவதில் தவறு இல்லை.
அதிமுகவின் அணுகுமுறையை பின்பற்றும் விஜய்?: பாஜக எதிர்ப்பு, திமுக எதிர்ப்பு என்கிற அதிமுகவின் அணுகுமுறை பின்பற்றுவது? பின்பற்றாமல் இருப்பது எல்லாம் அவரவர் விருப்பம். இதுவரை அண்ணா திமுகதான் எதிர்ப்பு குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. அதிமுகதான் திமுக செய்யக் கூடிய துரோகங்களை சுட்டிக்காட்டியது. மக்களின் பிரச்சனைகளை முன்வைத்தது. 41 மாத திமுக ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள், துன்பங்கள், துயரங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பாலியல் கொடுமைகள் இவை எல்லாவற்றையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இப்ப சில பேர் ஆதரவு கொடுப்பதாக உங்கள் கேள்விகள் மூலம் வந்து கொண்டிருக்கிறது. நாங்கள் வைத்த கேள்விகள், விமர்சனங்கள் இன்று பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.
தீயசக்தி திமுக: எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கும் போதே 'தீயசக்தி திமுக' என்றுதான் குறிப்பிட்டார். அப்படிப்பட்ட கட்சியை வீழ்த்த அன்று முதல் இன்று வரை போராடிக் கொண்டிருக்கிறோம். சில நேரங்களில் வென்றிருக்கிறோம்; சில நேரங்கள் வெல்ல முடியாமல் போயிருக்கிறோம். இப்போது திமுகவின் விஸ்வரூபத்தை அனைவரும் பார்த்துக் கொண்டதால் ஒவ்வொருவரும் தங்களது கருத்தை சொல்கின்றனர்.

வலிமையான கூட்டணி அமையும்: சட்டசபை தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகாலம்.. மூன்றில் 1 பங்கு காலம் இருக்கிறது. எதுவுமே தேர்தலுக்கு குறுகிய காலத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றால்தான் அது சாத்தியமாகும். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே எந்த ஒரு கட்சியும் கூட்டணி அமைப்பதாக எனக்கு தெரியவில்லை. அண்ணா திமுகவைப் பொறுத்தவரை எங்களுடன் ஒத்த கருத்துள்ள கட்சிகள் இணைந்து வலிமையான கூட்டணி அமையும். இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும்.
எத்தனையோ பேர் வந்தார்களே: தமிழ்நாட்டில் திமுக vs அதிமுக என்ற நிலையை மாற்ற நிறைய பேர் வந்தார்கள். அதிமுக பொன்விழா கண்ட கட்சி; 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி. தமிழ்நாடு இன்று இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உயர்ந்து நிற்க அதிமுக அரசுதான் காரணம். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைக் கூட முமையாக செயல்படுத்த முடியவில்லை. மெட்ரோ ரயில் திட்டம்-2 என்ன நிலைமை? ரூ1,000 கோடி கால்நடைப் பூங்கா திட்டம் என்னாச்சு? இவை எல்லாம் கிடப்பில் போட்டது திமுக. அத்திக் கடவு- அவினாசி திட்டம் முழுமையாக நிறைவேறவில்லையே.
2026-ல் அதிமுக ஆட்சி: ஜனநாயக நாட்டில் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். கட்டுப்பாடுகளே இல்லை. எந்த தடையும் இல்லை. இவை எல்லாம் தீர்மானிக்க வேண்டியது மக்கள். அதிமுக செய்த சாதனைகளை முன்வைத்து பிரசாரம் செய்வோம். மக்கள் எங்களை ஆதரிக்கும் சூழ்நிலையில் இருக்கின்றனர்., அத்துடன் பலமான கூட்டணி அமையும். 2026-ல் அதிமுக ஆட்சி அமையும். மக்களுக்கான திட்டங்கள் தொடரும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications