நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல்
சென்னை: தமிழ்ப் புத்தாண்டையொட்டி நீலாங்கரை வீடு முன் திரண்ட தொண்டர்கள், ரசிகர்களை வீட்டின் மதில் சுவர் மீது ஏணி போட்டு ஏறி மரக்கிளைகளுக்கு நடுவே கையசைத்தார். பின்னர் அங்கிருந்து காரில் அவிநாசிக்கு பிரச்சாரம் செய்ய புறப்பட்டார்.
தமிழ்ப் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் என பண்டிகைகள், நடிகரின் பிறந்தநாளின் போது தங்களுக்கு பிடித்த நடிகரின் வீட்டுக்குச் சென்று அவருக்கு வாழ்த்து சொல்ல பெரும்பாலானோர் விரும்புவார்கள்.

அது போல்தான் ரஜினி வீட்டிற்கும் இந்தந்த நாட்களில் ரசிகர்கள் கூடுவார்கள். ரஜினி ஊரில் இருந்தால் நேராக வெளியே வந்து ரசிகர்களுக்கு சிரித்தபடியே வாழ்த்து சொல்லி கைகூப்பி வணங்கி, பத்திரமாக செல்லுமாறு கூறுவார்.
ஒரு சில நேரங்களில் அதிக கூட்டம் இருந்தால் உள்புற கேட்டின் அருகே ஒரு நாற்காலி போட்டு ஏறி நின்று ரசிகர்களை பார்த்து கையசைப்பார். அது போல் விஜய்யின் நீலாங்கரை வீட்டின் முன் தொண்டர்கள் பெரும்பாலான நேரங்களில் கூடி வருகிறார்கள்.
விஜய் தேர்தல் பிரச்சாரத்திற்கோ பனையூர் அலுவலகத்திற்கோ, பட்டினம்பாக்கம் இல்லத்திற்கோ செல்வது அறிந்தாலே போதும் அவரது முகத்தை பார்த்துவிடமாட்டோமா என விஜய்யை பார்க்க அங்கு ஆண், பெண் என நிறைய பேர் கூடிவிடுகிறார்கள்.
அந்த வகையில் இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் விஜய் அவிநாசியில் பிரச்சாரத்திற்கு செல்வதாலும் அவரை பார்க்க நீலாங்கரை வீட்டின் முன்பு ஏராளமானோர் கூடினர்.

காலை முதலே ஏராளமானோர் கூடியிருந்தனர். இதை அறிந்த விஜய் வெளியே வந்து அவர்களை பார்த்து கையசைத்தார்... அதெல்லாம் இல்லைங்க! அவர் வீட்டுச் சுவரே 10 அடிக்கு மேல் இருக்கும் போல!
அந்த சுவர் மீது உள்பக்கமாக ஏணி போட்டு ஏறிய விஜய், தன்னை பார்க்க வந்தவர்களுக்கு கையசைத்தார். அதாவது மரக்கிளைகளுக்கு மத்தியில் ஒரு மரக்கிளையை பிடித்துக் கொண்டு அவர் ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.

பின்னர் ஏணியில் இருந்து இறங்கி காரில் ஏறி சென்னை விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார். விஜய்யை பார்க்க வரும் ரசிகர்கள் ஆங்காங்கே சுவர் மீது, டிரான்ஸ்பார்மர் மீது, மரங்களின் மீது, பேனர்கள் மீது ஏறி ஆபத்தை விலைக் கொடுத்து வாங்கும் நிலையில் தலைவர் விஜய்யே சுவரின் மீது ஏறி ரசிகர்களை பார்ப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைவன் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழி என்பதுதான் நினைவுக்கு வருகிறது. ரசிகர்களின் கை, கால்களை பூட்ஸ் காலால் மிதிக்கும் அளவுக்கு பவுன்சர்களை வைத்திருக்கும் விஜய், அவர்களுடன் வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கையசைத்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு ரசிகர்கள் என்றாலே அலர்ஜி என்பதை போல் சுவர் ஏறி கையசைப்பதை என்னவென சொல்வது என்கிறார்கள்!












Click it and Unblock the Notifications