தோழர்களாய் ஒன்றிணைவோம்.. தவெக உறுப்பினர் சேர்க்கை ஆப் அறிமுகம்.. வீடியோ போட்டு விஜய் வைத்த கோரிக்கை
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், இன்று உறுப்பினராக சேர்வதற்கான இணையதள லிங்கை வெளியிட்டார். தொடர்ந்து கட்சியின் முதல் உறுப்பினராக சேர்ந்த விஜய் வீடியோ வாயிலாக கோரிக்கையையும் வைத்தார்.
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். கட்சியில் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை சேர்க்கும் வகையில் பலதரப்பட்ட பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது. 2026 -ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் களம் இறங்க கொண்டு கட்சி உறுப்பினர்கள் மட்டும் பொதுமக்கள் சேர்க்கையை அதிகப்படுத்த கட்சி சார்பில் புதிய செயலி ஒன்றை இன்றைய தினம் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

அதன்படி, இன்று த.வெ.க தலைவர் விஜய், உறுப்பினராக சேர்வதற்கான இணையதள லிங்கை வெளியிட்டார். மேலும் கட்சியின் உறுப்பினராக சேர்ந்த விஜய் வீடியோ வாயிலாக கோரிக்கையையும் வைத்தார். விஜய் கூறியதாவது:- தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை நான் எடுத்துவிட்டேன்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை பின்பற்றி வரப்போகும் சட்டமன்ற தேர்தலை நோக்கி.. என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய.. எங்கள் கட்சியினுடைய உறுதிமொழியை படிங்க.. எல்லாருக்கும் பிடித்தது என்றால்.. விருப்பப்பட்டீர்கள் என்றால் சேருங்கள்" என்று கூறியுள்ளார்.
மேலும் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டு மக்களின் வெற்றிக்கான நமது பயணத்தில், தோழர்களாக இணைந்து மக்கள் பணி செய்ய விரும்பினால் நமது கட்சியின் உறுதிமொழியைப் படித்துவிட்டு, கீழே உள்ள உறுப்பினர் சேர்க்கை QR-Code இணைப்புகளைப் பயன்படுத்தி, மிகவும் எளிய முறையில் உறுப்பினர் அட்டையை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம் அன்புடன், விஜய், இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மேலும் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய கீழே குறிப்பிட்டுள்ள லிங்குகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
1) WhatsApp users - https://bit.ly/tvkhq
2) TelegramApp users - https://t.me/tvkvijaybot
3) WebApp users - https://bit.ly/tvkfamily
4) Send WhatsApp message as 'TVK' to 09444-00-5555
உறுதிமொழி: முன்னதாக விஜய் உறுதி மொழி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை. சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன்.
மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன். இவ்வாறு அதில் விஜய் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications