நாமக்கல்லுக்கு 8.45 மணிக்கு வர வேண்டிய விஜய்! நீலாங்கரையிலிருந்து புறப்பட்டதே 8.45-am க்குத்தான்
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நாமக்கல்லில் பிரச்சாரம் செய்ய அவருக்கு காலை 8.45 மணிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் சென்னையிலிருந்தே அவர் 8.45 மணிக்கு கிளம்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய், விக்கிரவாண்டியில் மாநில மாநாட்டையும் மதுரையில் இன்னொரு மாநாட்டையும் நடத்தி முடித்துள்ளார். தற்போது அவர் தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் பயணத்தை தொடங்கியுள்ளார்.

கடந்த 13 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அன்றைய தினம் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தை தொடங்கினார். ஆனால் முதல் நாளான அன்றைய தினமும் அவரால் உரிய நேரத்திற்கு பிரச்சார இடத்திற்கு வர முடியவில்லை.
திருச்சி விமான நிலையத்திற்கு காலை 9.30 மணிக்கு வந்துவிட்டார். திருச்சி மரக்கடை அருகே அவர் பேசுவதற்கு 10.30 மணி முதல் 11 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் மரக்கடைக்கு அவர் வருவதற்கே மதியம் 2.30 மணி ஆகிவிட்டது. சுமார் 20 நிமிட தூரத்தை அவர் கடக்க 6 மணி நேரம் ஆகும் அளவுக்கு வழிநெடுகிலும் கூட்ட நெரிசலால் அவரது பிரச்சார வாகனம் இன்ச் இன்ச்சாக நகர்ந்தது.
இதையடுத்து கடந்த 20ஆம் தேதி நாகை, திருவாரூர், தஞ்சை பகுதிகளிலும் பிரச்சாரம் செய்திருந்தார். அந்த வகையில் இன்றைய தினம் நாமக்கல்லிலும் கரூரிலும் அவர் பிரச்சாரம் செய்கிறார்.
நாமக்கல்லில் அவர் பிரச்சாரம் செய்ய காலை 8.45 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அவரோ காலை 8.45 மணிக்குத்தான் சென்னை நீலாங்கரை வீட்டிலிருந்து விமான நிலையம் வந்தார். அங்கிருந்து திருச்சிக்கு தனி விமானத்தில் வந்து, அங்கிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கார் மூலம் நாமக்கல் செல்ல 25 கி.மீ. தூரம் கொண்ட மேய்க்கல் நாயக்கன்பட்டியில் பிரச்சார வாகனத்தில் ஏறினார்.
அங்கிருந்து தற்போது மதியம் 1 மணியாகிறது. ஆனாலும் அவர் நாமக்கல் பிரச்சாரம் நடக்கும் இடத்திற்கு வருகை தரவில்லை. நாமக்கல்லில் 8.45 மணிக்கு பேசிவிட்டு கரூரில் அவர் 12 மணிக்கு பேசிவிட்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர் இதுவரை நாமக்கல்லில் கே.எஸ்.தியேட்டருக்கே வரவில்லை.
எனினும் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் நாமக்கல்லில் காலை முதலே பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். காலை 8.45 மணிக்கு கிளம்பிய விஜய் திருச்சி விமான நிலையத்திற்கு காலை 9.30 மணிக்கு வந்தார். அங்கிருந்து அவர் கார் மூலம் தொட்டியம் வழியாக மேய்க்கல்நாயக்கன்பட்டி சென்றார். அங்கு பிரச்சார வாகனத்தில் ஏறி நாமக்கல் திரையரங்கம் செல்கிறார். வழிநெடுகிலும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.
எந்த தொழிலாக இருந்தாலும் நேரம் தவறாமை முக்கியமானது. காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் இருக்க வேண்டும் என்றால் அவர் காலை 5 மணிக்கெல்லாம் வீட்டை விட்டு புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவரோ தாமதமாக புறப்பட்டுள்ளார். இதனால் மணிக்கணக்கில் பொதுமக்களும் குழந்தைகளும் பெண்களும் வயதானவர்களும் காத்திருக்கிறார்கள்.
இந்த மணிக்கணக்கான காத்திருப்பால் உள்ளூர் மக்களுக்கு போக்குவரத்து பிரச்சினை எழுந்துள்ளது. பயண திட்டங்கள் எல்லாமே முன்கூட்டியே பிளான் செய்யப்பட்ட நிலையில் எதற்காக தாமதமாக புறப்பட்டு இடைஞ்சல் கொடுக்க வேண்டும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. சினிமா ஷூட்டிங்கிற்குதான் சிலர் லேட்டாக வருவார்கள் என்றால் அரசியல் கூட்டங்களுக்கும் லேட்டாக வந்தால் அந்த தலைவர் மீது மக்களுக்கு சோர்வைத்தான் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications