இரவு 10 மணிக்கு.. விஜய்-எடப்பாடி பழனிச்சாமி திடீர் சந்திப்பு.. பின்னணி என்ன? வெளியான பரபரப்பு தகவல்
சென்னை: மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று இரவு 10 மணிக்கு மேல் சந்தித்து பேசியுள்ளார். அப்போது சந்திப்பு மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.
விஜயுடன், இணை தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் படக்குழுவினர் சிலரும் இந்த சந்திப்பின்போது உடனிருந்துள்ளனர்.
தீபாவளியன்று திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஆனால் 50 சதவீதம் பார்வையாளர்களுடன்தான் இயங்க அரசு அனுமதித்தது.

பெரிய நடிகர்கள்
இதன் காரணமாக பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் இன்னும் தியேட்டர்களில் வெளியாகவில்லை. சூரரை போற்று போன்ற படம் ஓடிடியில் வெளியானது. பெரிய நடிகர்கள் நடிக்கும் படம் பட்ஜெட்டும் அதிகம். எனவே 80 முதல் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை இயங்க அனுமதித்தால்தான் போட்ட பணத்தை தயாரிப்பாளர் திரும்ப பெற முடியும்.

மாஸ்டர் படம்
மாஸ்டர் படம் ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளது. பொங்கலை முன்னிட்டு தியேட்டரில் வெளியிடுகிறது தயாரிப்பு நிறுவனம். தியேட்டரில்தான் வெளியிட வேண்டும், ஓடிடியில் கூடாது என்பதில் விஜய் மிகவும் உறுதியாக இருந்துள்ளார். தயாரிப்பு நிறுவனம் அரை மனதுடன் சம்மதித்ததாக கூறப்படுகிறது.

எடப்பாடியார்-விஜய் சந்திப்பு
இந்த நிலையில்தான், தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படக் கூடாது என்பதற்காக, தியேட்டர்களில் ரசிகர்களுக்கான இருக்கை அளவை அதிகரிக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என முதல்வரிடம் விஜய் கோரிக்கைவிடுத்துள்ளார். ஆனால் இந்த தகவல் அப்போது வெளியாகவில்லை.

தலைவா படம்
இந்த தகவல் வெளியாக வேண்டாம், ரகசியமாக இருக்க வேண்டும் என தயாரிப்பு தரப்பு விரும்பியுள்ளது. ஆனால் இன்று காலை விஷயம் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, 2013ம் ஆண்டு 'தலைவா' திரைப்படத்திற்கு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தடை விதித்தார். ஜெயலலிதாவை சந்தித்து படத்திற்கு தடையை நீக்க விஜய் கோரிக்கை வைக்க கோடநாடு எஸ்டேட் வரைச் சென்றார். ஆனால் ஜெயலலிதா சந்திக்கவில்லை. பிறகு விஜய் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், அம்மா தமிழகத்திற்கு எவ்வளவோ நல்லது செய்துள்ளார்கள்.தமிழகத்தை முதல் மாநிலமாகக் கொண்டு வர உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களுக்கு இவ்வளவு நல்ல விஷயங்களைச் செய்யும் அவர்கள், இந்த தலைவா பிரச்னையிலும் தலையிட்டுக் கூடிய சீக்கிரம் படம் வெளியாக உதவி செய்வார்கள் என்று நம்புகிறோம் என்று விஜய் பேசியிருந்தார். இதன்பிறகு சில நாட்களில் படம் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications