நடிகர் விஜய்யின் அரசியல் வேடம்.. என்ன நடிப்புடா சாமி.. 36 வினாடி வீடியோ வெளியிட்டு பாஜக விமர்சனம்
சென்னை: 36 வினாடிகள் மட்டுமே இந்த காணொளியை கேளுங்கள்.. நடிகர் விஜய் அவர்களின் அரசியல் வேடம் நன்றாக வெளிப்படும் என்று கூறி தமிழக பாஜக மாநில செயலாளரும் பேராசிரியருமான ராமசீனிவாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய், தனது அரசியலில் யார் யார் எதிரி என்பதை அடையாளப்படுத்தி, தனது கட்சியின் மாநாட்டில் பேசினார். அவருக்கு பாஜக, திமுக இரண்டுமே கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்வினையாற்றி வருகிறார்கள்.
கடந்த அக்டோபர் 27ம் தேதி நடந்த தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பேசிய விஜய், பாஜக, திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது அவர் பேசகையில், "எதிரிகள் இல்லாத வெற்றிகள் இருக்கலாம், ஆனால் களம் இல்லாமல் இருக்க முடியாது. அந்த களத்தில் நம்முடைய வெற்றியை தீர்மானிப்பது எதிரிகள்தான். நாம் கட்சியை அறிவித்த உடனே பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன போதே எதிரியை முடிவு செய்து விட்டோம். இதை நாம் சொன்னபோதே கதறல் சத்தம் கேட்க ஆரம்பித்தது. இந்த மாநாட்டுக்கு பிறகு இந்த கதறல் இன்னும் அதிகமாக இருக்கும்.

சாதி, மதம், இனம், ஏழை, பணக்காரன், மக்களை பிரித்து ஆளும் பிளவு வாத அரசியல் மட்டும் தான் நமக்கு எதிரியா, அப்படியென்றால் நமக்கு ஒரு எதிரி தானா, இல்லையே, நமக்கு இன்னொரு கோட்பாடு இருக்கிறது. ஊழல் மலிந்த கலாசாரத்தை எதிர்ப்பது தானே அது. ஊழல் கலந்து போய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 100 சதவீதம் பரவி கிடக்கிறது. இதை முழுவதுமாக ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை. முயற்சி செய்வோம்.
பிளவுவாத கட்சியை கூட நாம் கண்டுபிடித்து விடலாம். அது மதம் பிடித்த யானை மாதிரி. காட்டி கொடுத்து விடும். ஆனால் இந்த ஊழல் இருக்கிறதே அது எங்கே ஒளிந்திருக்கிறது, எங்கு ஒளிந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. முகமூடி தான் முகமே. ஊழல்வாதிகள், கலாசாரம் என பல்வேறு வேடம் அணிந்து கண்ணுக்கு தெரியாமல் வருவார்கள். முகமூடி போட்ட ஊழல்வாதிகள் இருந்து கொண்டு, இப்போது நம்மை ஆண்டு கொண்டும் இருக்கிறார்கள். உண்மை தான். ஒரு எதிரி பிளவுவாத சக்திகள், இன்னொரு எதிரி ஊழல் கபடவாதிகள்.
எதிரிகள் யார் என்று சொல்லி விட்டால் போதுமா, இதுதான் அரசியல் என்றால் இல்லை. மக்களுக்கு நன்மை செய்வதே மகத்தான அரசியல். மக்களோடு மக்களாக, அவர்களுடன் ஒருவனாக நிற்பதே எங்களின் நிரந்தர அரசியல்.
எங்கள் கொள்கை, நிலைப்பாடு யதார்த்தமாக இருக்க வேண்டும். மாற்று அரசியல் என்று நாம் ஏமாற்றுகிற வேலையை செய்ய போவதில்லை. இங்கே இருக்கிற அரசியல் கட்சிகளில் 10, 11-வது கட்சியாக மாற்றுச்சக்தி என்று சொல்லிக்கொண்டு வரவில்லை. அது போன்று செய்து கொண்டு மக்கள் மேடைகளில் தங்களை மாபெரும் சக்திகள் என்று சொல்லிக்கொண்டு திரியும் ஏமாற்று சக்திகளின் பிடியில் இருந்து மீட்டு தமிழகத்தை மாற்றும் முதன்மையான சக்தியாக இருந்து உங்களில் ஒருவனாக இருந்து உழைக்க வேண்டும். இதுதான் எங்கள் இலக்கு. அந்த முடிவுடன் தான் வந்திருக்கிறேன்.
இங்கே ஒரு கூட்டம் கொஞ்சம் காலமாக யார் அரசியலுக்கு வந்தாலும், ஒரு குறிப்பிட்ட கலரை அவர்கள் மீது பூசி, பூச்சாண்டி காட்டி, மக்களை ஏமாற்றி, இவர்கள் மட்டும் மறைமுகமாக டீலிங் வைத்துக்கொண்டு, தேர்தல் நேரத்தில் அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் பாசிசம் என்று சொல்லிக்கொண்டு போகிறார்கள். ஒற்றுமையாக இருக்கும் மக்கள் மத்தியில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பிரிவினை பயத்தை காட்டி ஒரு சீன் போடுவதே வேலையாக போய்விட்டது.
நான் தெரியாமல் தான் கேட்கிறேன், அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?. நீங்களும், அவர்களுக்கு சரிசமம் தான். மக்கள் விரோத ஆட்சியை, திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். எனவே இனியும் அந்த கலரை, இந்த கலரை பூசி, என்னதான் மோடி மஸ்தான் வேலையை செய்தாலும் ஒன்றும் நடக்காது, தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள கலரை தாண்டி, யாரும் எந்த கலரையும் அடிக்கவே முடியாது. எங்கள் கோட்பாடே பிறப்பால் அனைவரும் சமம் என்பது தான். இது யாருக்கு நேர் எதிரான கோட்பாடு என்பதை நான் சொல்லியா தெரிய வேண்டும்?,
இந்த நாட்டை பாழ்படுத்தும் பிளவுவாத அரசியல் செய்வோர்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை ரீதியான முதல் எதிரி. திராவிட மாடல் ஆட்சி என்று பெரியார், அண்ணா பெயரை வைத்து தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநலக்கூட்டம் தான் அடுத்த எதிரி,
கொள்கை, கோட்பாடு அளவில் தேசியத்தையும், திராவிடத்தையும் பிரித்துபார்க்க போவதில்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள். நாம் எந்த குறிப்பிட்ட அடையாளத்தின் கீழும் நம்மை சுருக்கி கொள்ளாமல், மதச்சார்பற்ற சமூக நீதிகொள்கைகளை, நமது கொள்கை அடையாளமாக முன்னிறுத்தி செயல்பட போகிறோம்" என்று கூறினார்.
36 வினாடிகள் மட்டுமே இந்த காணொளியை கேளுங்கள் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் வேடம் நன்றாக வெளிப்படும்.....
— Raama Sreenivasan (@ProfessorBJP) October 31, 2024
இந்த காணொளியின் முதல் பகுதி மெர்சல் திரைப்படத்தின் தெலுங்கு வசனங்கள்
அதில் அவர் சொல்கிற வசனம் ""பாரத மாதா ""
இந்த காணொளியின் இரண்டாம் பகுதி அதே மெர்சல் படத்தின் தமிழ்… pic.twitter.com/mjSdNAnIUK
இதனிடையே நடிகர் விஜய்யின் பேச்சு திமுக இணையதளத்தில் கடுமையான எதிர்வினையாற்றி வருகிறது. ஹெச் ராஜா, தமிழிசை சௌந்திராஜன் உள்பட பாஜகவினர் பலரும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். அந்த வகையில் 36 வினாடிகள் மட்டுமே இந்த காணொளியை கேளுங்கள் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் வேடம் நன்றாக வெளிப்படும் என்று கூறி தமிழக பாஜக மாநில செயலாளரும் பேராசிரியருமான ராமசீனிவாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "36 வினாடிகள் மட்டுமே இந்த காணொளியை கேளுங்கள் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் வேடம் நன்றாக வெளிப்படும்.....
இந்த காணொளியின் முதல் பகுதி மெர்சல் திரைப்படத்தின் தெலுங்கு வசனங்கள்.. அதில் அவர் சொல்கிற வசனம் ""பாரத மாதா "" என்று இருக்கும். இந்த காணொளியின் இரண்டாம் பகுதி அதே மெர்சல் படத்தின் தமிழ் வசனங்கள் இருக்கும். அதில் அவர் சொல்கிற வசனம் ''தமிழ்''
விஜய் அதென்ன தெலுங்கில் ஒரு மாதிரியும் தமிழில் வேறு மாதிரியும் சொல்வதுமான இரட்டை வேடம் ? தெலுங்கு வசனங்களிலும் தெலுங்கு என்று சொல்ல வேண்டியது தானே அல்லது தமிழ் வசனங்களில் பாரத மாதா என்று சொல்ல வேண்டியது தானே ? பாரதமாதா என்று சொல்ல கசக்குதா விஜய்? என்ன நடிப்புடா சாமி?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications