தூயசக்தி விஜய் அம்பலப்பட்டுவிட்டார்.. அரசியல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவு.. தராசு ஷ்யாம் கருத்து!
சென்னை: தூயசக்தி என்று தன்னை தானே அழைத்து வந்த விஜய் இப்போது அம்பலப்பட்டுவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் விமர்சித்துள்ளார். வருமான வரித்துறை விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசியல் ரீதியாக விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் தெரிவித்துள்ளார்.
புலி படத்தில் நடித்ததற்கு வாங்கிய ரூ.15 கோடி சம்பளத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வரி ஏய்ப்பு செய்ததாக விஜய்க்கு வருமான வரித்துறை தரப்பில் ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. 2022 ஜூன் 30ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார்.

இதனிடையே ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்த போது ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின் விஜய் தொடர்ந்து வழக்கின் விசாரணையின் போது வருமான வரித்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது விஜய் தரப்பில் கால தாமதமாக அபராதம் விதிக்கப்பட்டதாக வாதிடப்பட்டது.
இறுதியாக விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் என்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றன், விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இது அரசியல் தளத்தில் விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், தூய சக்தி இப்போது அம்பலப்பட்டு போய் நிற்கிறது.
வருமான வரி என்பது தனிநபர் சார்ந்தது. வருமான வரித்துறை வழக்கு என்பது அபராதம், அபராதத்திற்கான வட்டி உள்ளிட்டவற்றை செலுத்திவிட்டு எதிர்கொள்வதே சரியாக இருக்கும். வருமான வரித்துறை உள்ளாகவே இரு வகையான அப்பீல் உள்ளது. விஜய் நட்சத்திரமாக இருந்த போது, இந்த சம்பவம் நடந்துள்ளது. இதன்பின் வழக்குக்கு சென்றார். தொடர்ந்து அரசியலுக்கு வந்தார்.
அரசியலுக்கு வந்த பின் சினிமாவின் உச்சத்தை விட்டுவிட்டு வந்துள்ளேன் என்ற ஒரு பில்டப் இருந்தது. தற்போது நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அரசியல் கட்சித் தலைவருக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பாகவே கருதப்படும். இதனால் விஜய் கூறி வந்த தூயசக்தி என்ற பிம்பம் உடைக்கப்பட்டு, விஜய் ஒரு மாயசக்தி என்று விமர்சனங்கள் வைக்கப்படும். இது அரசியல்வாதி விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவு.
பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர் தங்களை தூய்மையானவர்களாக வைத்துக் கொள்ள வேண்டும். தூய சக்தி என்றால் நாம் அதனை நிரூபிக்க வேண்டும். விஜய் மீது அரசை ஏமாற்றிய குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் விஜய்யின் வீட்டில் நடந்த ரெய்டு அடிப்படையில், வருமானத்தை மறைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் கருப்புப் பணம் என்ற விமர்சனத்தை முன் வைத்து வரும் அதிமுக இன்னும் அதிகமாக தாக்கும். அதேபோல் விஜய் வெறும் வாய் சொல் வீரர் என்ற திமுகவின் வாதம் எடுபட தொடங்கும். அரசியலுக்கு வந்த பின் விஜய் இந்த வழக்கை வாபஸ் பெற்றிருக்க வேண்டும். இந்த விவகாரத்தை திமுக கையில் எடுக்கும் என்று கருதுவதாக தெரிவித்துள்ளார். இதனை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications