தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி வாக்காளர்களை சேர்க்க இலக்கு.. விஜய் போட்ட முக்கிய உத்தரவு என்ன?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி வாக்காளர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த 2ஆம் தேதி தொடங்கினார். இந்த கட்சியின் பெயரில் க் என்ற எழுத்து பிழை பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

தனது கட்சியின் பெயரில் தமிழ் மொழியையே காக்க முன் வராத விஜய் எப்படி தமிழக மக்களை காப்பாற்றுவார் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் நியாயமான விமர்சனங்கள் என்றால் அதை ஏற்கத்தான் வேண்டும் என கூறினார் விஜய்.
இதையடுத்து நேற்றைய தினம் தனது கட்சியின் பெயரில் க் என்ற எழுத்தை சேர்த்து திருத்தம் மேற்கொண்டார். அதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்திருந்தார்.
இவருடைய கட்சியின் சின்னம், கொடி ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கட்சிக்கு அங்கீகாரம் வழங்கியதும் வெளியிடுவார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, உள்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.
கட்சியின் மாவட்ட தலைமை நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்திருந்தார்.
விஜய் கட்சியின் பெயரை அறிவித்ததுமே வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடாது. எந்த கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை. வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதுதான் நமது இலக்கு. இவ்வாறு விஜய் ஒரு நீளமான அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
புஸ்ஸி ஆனந்த் பேட்டி: இந்த ஆலோசனை கூட்டம் காலை 9 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வந்தது. மேலும் இந்த ஆலோசனை சில மணி நேரங்கள் நடக்கும் என தெரிகிறது. இதன் இடையே கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்து கூறியிருப்பதாவது: 2 கோடி வாக்காளர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
எத்தனை நாட்களுக்குள் சேர்க்கப்படும் என்பதை உறுப்பினர்கள் தெரிவித்தார்கள். அதை விஜய்யிடம் சொன்னோம். அவரும் அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாக்காளர்களை சேர்க்குமாறு தெரிவித்திருந்தார். அது போல் கட்சியின் நியமனங்கள், அறிவிப்புகள் அனைத்துமே கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில்தான் வெளியிடப்படும்.
போஸ்டர் , பேனர் பயன்படுத்தும் போது கட்சி தலைமையின் வழிகாட்டுதலை பின்பற்ற நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அது போல் கட்சியின் உள்கட்டமைப்பு தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. விஜய் அவ்வப்போது ரசிகர்களையும் பொதுமக்களையும் சந்தித்துக் கொண்டுதான் வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் தற்போது அரசியல் கட்சியாக உருவான பிறகு மக்களிடையே நிறைய வரவேற்பு உள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தினருக்குத்தான் கட்சியல் முக்கியத்துவம் அளிக்கப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் விஜய் ரசிகர்களை கண்டறிந்து கட்சியில் சேர்க்க வேண்டும். தனக்கு தெரியாமல் எந்த ஒரு மாவட்ட அளவிலான பதவியையும் வழங்கக் கூடாது என விஜய் உத்தரவிட்டுள்ளார். இரு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் விரைவில் நிர்வாகிகளை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் பெயரையும் விஜய் மக்கள் இயக்க கொடியையும் பயன்படுத்தி விஜய் ரசிகர்கள் தேர்தல்களில் வென்றனர். அவர்கள் தொடர்ந்து தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு பணியாற்றி வருவதாக தெரிகிறது. தொண்டர்களே இப்படி என்றால் தலைவர் எப்படி இருப்பார் என்ற கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது. இதற்காக விஜய்யின் கொள்கை, தேர்தல் அறிக்கை, கூட்டணி உள்ளிட்டவை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications