ஃபுல் சப்போர்ட் செய்த நமீதா.. "கர்நாடக தேர்தலை விடுங்க.. அண்ணாமலை மேல நம்பிக்கை இருக்கு".. என்னவாம்
சென்னை: கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணியாற்றிய தொகுதிகளில் அக்கட்சி கடுமையான தோல்வியை சந்தித்திருக்கிறது. இதனால் அண்ணாமலை மீது விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அண்ணாமலையை விமர்சிப்பது தனக்கு பிடிக்கவில்லை என்று நடிகையும், பாஜக நிர்வாகிகளில் ஒருவருமான நமீதா ஆவேசமடைந்துள்ளார்.
தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகாதான். இந்நிலையில், இம்மாநிலத்திற்கான தேர்தல் மே 11ம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் 13ம் தேதி எண்ணப்பட்டன. இந்நிலையில், இதில் பாஜகவை வீழத்தி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. மொத்த முள்ள 224 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 113 தொகுதிகளை வெல்ல வேண்டும். ஆனால் இந்த முறை காங்கிரஸ் 135 தொகுதிகளை வென்றுள்ளது. குறிப்பாக அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்ட தொகுதிகளில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது.

பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலையை பொறுத்த அளவில் இந்த தேர்தல் அவருக்கு மிகவும் முக்கியமானதாகும். காரணம் இதுவரை இவர் அரசியலில் தன்னை நிரூபிக்கவில்லை. இவருடைய அரசியல் செயல்பாடுகளின் உச்சம் எனில் அது சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த திமுக தலைவர்களின் சொத்து பட்டியல்தான். ஆனால் இது பெரிய அளவில் ஒர்க்கவுட் ஆகவில்லை. சொல்லப்போனால் அண்ணாமலை தவிர வேறு யாரும் இது குறித்து வெளிப்படையாக வாய்திறக்கவில்லை. எனவே தன்னை அரசியலில் சாணக்கியராக காட்டிக்கொள்ள அவருக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்புதான் இந்த கர்நாடகா தேர்தல்.
இவருக்கு இந்த தேர்தலில் உடுப்பி- சிக்கமகளூரு 8 தொகுதிகள், தாவணகெரே 7, ஷிவமொகா 7, கோலார் 6, மாண்டியா 7, ஹாசன் 7, தட்சிண கன்னடா 8, பெங்களூரில் 28, உத்தர கன்னடாவில் 6 தொகுதிகள், என அண்ணாமலைக்கு மொத்தமாக 10 மாவட்டங்களிலிருந்து 86 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிட வேண்டும் என்பதைக்கூட அவர்தான் தீர்மானிப்பதாக இருந்தது. இதில் பெரும்பான்மையான தொகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இதில் பெரும்பான்மையான தொகுதிகளில் பாஜக கடும் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக தாவணகெரேவின் 7 தொகுதிகளில் பாஜக ஒரேயொரு தோகுதியில் மட்டும்தான் வெற்றி பெற்றிருக்கிறது. ஷிவமொகாவின் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் பாஜக ஒரேயொரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. மற்ற 6 தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. மாண்டியாவிலும் இதே நிலைதான். மொத்தமுள்ள 7 தொகுதிகளில் 6ல் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் பாஜகவுக்கு ஒரேயொரு தொகுதி மட்டுமே கிடைத்திருக்கிறது.
மற்ற தொகுதிகளிலும் இதே இநிலையில்தான் இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை நமிதா, "அண்ணாமலையை விமர்சிப்பது தனக்கு பிடிக்கவில்லை" என்று கூறியுள்ளார். கோவை மதுக்கரை பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்து பேசிய நமீதா மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து பேசியதாவது, "இந்த முறை தோல்வியடைந்தது ஒன்றும் பிரச்னையில்லை. அடுத்தமுறை நிச்சயம் வெற்றி பெறுவோம். மாநில தலைவர் அண்ணாமலை மீதும், பிரதமர் மோடி மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இன்று இல்லை என்றாலும் கூட நாளை நிச்சயம் வெல்வோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications