அதிமுக முன்னாள் அமைச்சர் என்னை ஏமாற்றிய வழக்கை சிபிசிஐடி விசாரிக்கணும்.. கோர்ட்டுக்கு ஓடிய நடிகை!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என நடிகை சாந்தினி வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.மணிகண்டன். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை சாந்தினி புகார் அளித்தார். தன்னுடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு, பின்னர் கருக்கலைப்பும் செய்யச் சொல்லிவிட்டு, தன்னை விட்டு பிரிந்துவிட்டதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சினிமா துணை நடிகை சாந்தினி புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் போலீசார், மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, பெங்களூரில் வைத்து அவரை கைது செய்தனர். அதன் பின் ஜாமீனில் வெளியில் வந்தார் மணிகண்டன். இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு மணிகண்டனும், சாந்தினியும் சமரசம் செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து, மணிகண்டன் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதையடுத்து, நடிகை சாந்தினி, மணிகண்டன் வீட்டுக்குச் சென்ற நிலையில் அவரை உள்ளே விடாமல் அனுப்பினர். இதையடுத்து, தன்னை பார்த்துக் கொள்வதாக கூறிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன், வழக்கை வாபஸ் பெற்ற பிறகு தன்னை சந்திக்காமல் தலைமறைவாகி விட்டதாக புகார் அளித்தார்.
மேலும், நடிகை சாந்தினி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் மலேசியாவில் வேலை பார்த்து வந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கினார். பின்னர் கருவை கலைக்குமாறு மிரட்டினார். இது தொடர்பாக அடையாறு காவல் நிலையத்தில் கடந்த 2021 இல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ரகுபதி என்பவர் மணிகண்டனின் உறவினர் எனக் கூறிக்கொண்டு மணிகண்டன் மீதான புகாரை திரும்ப பெற வேண்டும் இல்லையெனில் என்னை உயிரோடு எரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
அதேபோல அதிமுகவைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் தொலைபேசி மூலமாக என்னை தொடர்பு கொண்டு, எனக்கும் மணிகண்டனுக்குமான பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் எனக்கூறி மதுரை வரவழைத்தார். அங்கு மணிகண்டன் என்னை சந்திக்காத நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு மறுநாள் சென்றபோது, அவரது தாயார் அன்னக்கிளி உள்ளிட்டோர் என் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
பின்னர் காவல்துறையினர் என்னை மீட்டு மதுரை மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க, அங்கு சிகிச்சை பெற்றேன். இது தொடர்பாக புகார் அளித்த நிலையில் மணிகண்டன் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வழக்கு பதிவு செய்ய விடாமல் தடுத்து விட்டார். பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு ராமநாதபுரம் பி2 பஜார் காவல் நிலையத்தில் 2022 நவம்பர் 18ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் எவ்விதமான முன்னேற்றமும் இன்றி அந்த வழக்கு கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார் நடிகை சாந்தினி.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்பு, நடிகை சாந்தினி வழக்கை வாபஸ் பெற முடிவெடுத்ததால் ஐகோர்ட் வழக்கை ரத்து செய்திருந்த நிலையில், மீண்டும், அவரது வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications