ஆதவ் அர்ஜுனா? திருநங்கை ரோஷினி? கார்த்திக் மோகன்? வில்லிவாக்கம் தொகுதியில் முந்துவது யார்?
சென்னை: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வில்லிவாக்கம் தொகுதியில் களம் கண்டுள்ள திருநங்கை ரோஷினி யார்? அவர் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? இந்த 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் சென்னை வில்லிவாக்கம் தொகுதி மீது வாக்காளர்களின் கவனம் குவிந்துள்ளது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதில், முக்கியமான ஒன்று நாதக வேட்பாளர் ரோஷினி. அவர் ஒரு திருநங்கை. களத்தில் மிகத் தீவிரமாகத் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
திருநங்கைகளுக்குத் தனி நலவாரியம் அமைத்தது திமுக அரசுதான். அதைச் செய்தவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. பல விஷயங்களில் முன்மாதிரியாக விளங்கிய திமுக, இதுவரை கட்சித் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகால வரலாற்றில் ஒரு மாற்றுப்பாலினத்தவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியதில்லை. சமூகநீதியைப் பெரிதாக வலியுறுத்தும் அக்கட்சியில் இன்னும் பெண் வேட்பாளர்களுக்குக் கூட உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காதது பெரிய சோகம் என்று சொல்ல வேண்டும்.

நாதகவில் திருநங்கைக்கு வாய்ப்பு
களத்தில் வெற்றிவாய்ப்பு சாதகமாக இல்லை என்றாலும் நாதக சில முன்மாதிரியான விஷயங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதிக பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள ஒரே கட்சி நாம் தமிழர்தான். சீமான் இந்த முறை வில்லிவாக்கம் தொகுதியில் ஒரு திருநங்கையைக் களம் காணச் செய்துள்ளார்.
இந்த மாநில அங்கீகாரம் பெற்ற கட்சி சார்பில் போட்டியிடும் ஒரே மாற்றுப் பாலின வேட்பாளர் ரோஷினி தான். அவருக்குத் தொகுதியில் பெரிய அளவில் கூட்டம் கூடவில்லை. அவர் நட்சத்திர வேட்பாளரும் இல்லை. அதை அறிந்தும் மிகத் தைரியமாக வீடுவீடாகச் சென்றும் வாக்கு சேகரித்து வருகிறார் ரோஷினி.
ரோஷினி தேர்ந்தெடுத்திருப்பது ஒரு மாற்றுக் கருத்தியல். கடந்த 75 ஆண்டுகளாகத் திராவிட இயக்கங்களே இந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. அதற்கு மாற்றாகத் தமிழ்த் தேசியம் என்பது தேர்தல் களத்தில், சீமானின் வருகைக்குப் பின் ஒரு புதிய வேகத்தைப் பெற்றுள்ளது. அதன் பிரதிநிதியாகத் தான் போட்டியிடுவதில் மகிழ்ச்சி என்கிறார் ரோஷினி. மண் வளம், இயற்கை வளம், வேளாண்மை எனப் பலவற்றிற்கும் முக்கியத்துவம் அளிப்பது என்.டி.கேதான் என்பதால் இக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளதாக அவர் சொல்கிறார்.
வில்லிவாக்கம் தொகுதி வாக்காளர்கள் தன்னிடம் இரண்டு திராவிட இயக்க கட்சிகளின் மீதும் நம்பிக்கை இழந்துள்ளதாகத் தெரிவிக்கும் ரோஷினி, அது களத்தில் எதிரொலிப்பதாகத் தெரிவிக்கிறார்.
முற்றிலும் கவர்ச்சியான இலவச பொருள்களை வழங்குவதைவிட நல்ல குடிநீர், சுகாதாரம், இயற்கை பாதுகாப்பு ஆகியவற்றை உருவாக்குவதே தங்களில் இலட்சியம் என்கிறார். இப்போது திமுக, அதிமுக அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை இலவசமாகத் தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். சுகாதாரமான நல்ல குடிநீரை இலவசமாக இவர்களால் வழங்க முடியுமா? என்றும் எதிர்க்கேள்வி கேட்கிறார்.
ஆளும் கட்சியுடன் மோதல்?
ரோஷினிக்கு வில்லிவாக்கம் புதிது. அவருக்கு இத்தொகுதியைச் சீமான் அளித்துள்ளார். ஆகவே, அவர் முடிவின்படி இங்கே போட்டியிடுகிறார். ரோஷினிக்கு மூன்றாம் பாலினம் என்ற அடையாளம் ஏற்புடையதாக இல்லை. எல்லோரும் சக மனிதர்கள் என்ற நிலையே சரியானது என்கிறார். அவருக்கு இந்தத் தொகுதியைத் திருநங்கை என்பதற்காக வழங்கவில்லை. சீமான், தன்னை அறிமுகம் செய்யும்போதுகூட மூன்றாம் பாலினத்தவர் என்று அடையாளப்படுத்தவில்லை. சமமாகவே பாவித்து ரோஷினி என்று மட்டுமே கூறினார் என்கிறார்.
இந்த கெளரவம் தனக்குப் பிடித்துள்ளதாகவும், மனநிறைவு அளிப்பதாகவும் சொல்கிறார் ரோஷினி. வில்லிவாக்கம் தொகுதியில் உதயநிதிக்கு நெருக்கமான கார்த்திக் மோகன் திமுக சார்பில் போட்டியிடுகிறார். அவரது வெற்றி என்பது திமுக தலைமை முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அங்கே தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவைத் தோற்கடிக்க வேண்டும் என ஆளும் கட்சி பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
வில்லிவாக்கத்தைப் பொறுத்தவரை ஆதவ் அர்ஜுனாவும் ஆளும் கட்சியின் வேட்பாளர் கார்த்திக் மோகனும் வாக்காளர்களைக் கவரப் போட்டிப் போட்டுக் கொண்டு பணத்தை வாரி இரைத்துவருவதாகக் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட்டில் அதிகம் சொத்து கணக்குகளைத் தாக்கல் செய்துள்ள ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதி இது. இங்கே ஒரு சாதாரண குட்டி யானை வண்டியில்தான் நாதக வேட்பாளர் ரோஷினி பிரச்சாரம் செய்து வருகிறார்.
ரோஷினிக்கு 30 வயதாகிறது. சென்னை கோவளம் பகுதியில் வசித்து வரும் இவர், வில்லிவாக்கம் மக்களை நம்பி களம் கண்டுள்ளார். இவருக்கு இரண்டு வங்கிக் கணக்குகள் உள்ளன. ஒரு கணக்கில் 50 ஆயிரமும் மற்றொரு கணக்கில் 10 ஆயிரமும் வைத்துள்ளார். தங்க நகைகள், வெள்ளி நகைகளின் மொத்த மதிப்பு 17,10,000 ஆகும். மொத்த மதிப்பு 18,30,000 ஆக உள்ளது. இவருக்கு வங்கியில் 10,46,541 ரூபாய்க்கு நகைக்கடன் உள்ளது. இதுவே இவரது மொத்த கடனாகும். சுய தொழில் செய்து வரும் ரோஷினி, அன்றாட வருமானம் ஈட்டி வரும் வேட்பாளராக எளிய வாழ்க்கை பின்புலம் கொண்டவர்.
வில்லிவாக்கம் தொகுதியில் கடந்த 2021 திமுக வேட்பாளர் அ.வெற்றியழகன் வெற்றி பெற்றார். கடந்த முறை அதிமுக வேட்பாளர் ஜே.சி.டி. பிரபாகர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இவர் இப்போது விஜய் கட்சியில் இணைந்துள்ளார். அவர் இடத்தைதான் ஆதவ் அர்ஜுனா பிடித்துள்ளார். இங்கே பிரபாகர் மக்களிடையே நன்கு அறிமுகமானவர். 2016 தேர்தலில் திமுகவே வென்றது. 2011 ஜே.சி.டி. பிரபாகர் வென்றுள்ளார்.
ஆளும் கட்சிக்கும் தவெகவுக்கும் மிகக் கடுமையான நேரடிப் போட்டி நிலவும் இந்த வில்லிவாக்கத்தில் நாதக ஒரு திருநங்கையை வேட்பாளராக முன் நிறுத்தியதால், அது பேசுபொருளாகியுள்ளது.
- கடற்கரய்












Click it and Unblock the Notifications