களையிழந்து காணப்பட்ட அதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழா…!
சென்னை: அதிமுகவின் 48-வது ஆண்டு தொடக்க விழா சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
ஜெயலலிதா இருந்த வரை இந்த விழா மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் சென்னையில் குவிந்துவிடுவார்கள். .ஆனால், இன்று தொண்டர்கள் கூட்டம் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே இருந்தது .

இடைத்தேர்தல் பணிகளில் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதாலும், தொடர் மழை காரணமாகவும் கடந்த ஆண்டுகளை போல் இந்தாண்டு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கு குழுமியிருந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தானே தட்டில் கொண்டு சென்று இனிப்புகளை வழங்கினார். அமைச்சர்கள் பலரும் கூட இந்த விழாவில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.
கட்சியை பொறுத்தவரை ஒருங்கிணைப்பாளர் என்ற தலைமை இடத்தில் இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம் தான். ஆனால் இன்று நடைபெற்ற விழாவில் அவரைக் காட்டிலும் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமிக்கு சற்று மரியாதை அதிகம் வழங்கப்பட்டது.
இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், அதிமுக கொடியை ஏற்றி, எம்.ஜி.ஆரின் கொள்கை பாடல்களை ஒலிக்கவிட்டும், இனிப்புகளை பரிமாறியும் அதிமுகவினர் இந்த விழாவை கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications