விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் தான்.. எடப்பாடி ஒரே போடு.. ஆனால் அடுத்து சொன்ன பாயிண்டு ரொம்ப முக்கியம்
சென்னை: தமிழ்நாட்டில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மட்டுமே போட்டி இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விஜய் சொல்வதை எல்லாம் நாங்கள் ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை என்றும் சினிமாவில் விஜய் சூப்பர் ஸ்டார் என்றாலும் அரசியல் களத்திற்குப் புதியவர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான களம் இப்போது சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு வழிகளிலும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இதற்கிடையே ஆங்கில ஊடகமான இந்தியா டுடே சார்பில் நடந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி
அதில் தமிழக அரசியல் குறித்து சில முக்கிய கருத்துகளை எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக அரசியல் களத்தில் இப்போது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே மட்டுமே போட்டி இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், தேர்தல் தொடர்பான அறிவிப்பு வந்த பிறகே, மாநிலத்தில் எத்தனை முனைப் போட்டி என்பது தெரிய வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும், கூறுகையில், "விஜய் சொல்வதை எல்லாம் நாங்கள் ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை.. களத்தில் யாரை வீழ்த்த வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்; மற்றவர்களைப் பற்றிப் பேசுவது பொருத்தமாக இருக்காது.
சினிமாவில் சூப்பர் ஸ்டார்
அவர் ஒரு தேர்தலில் கூட சந்திக்கவில்லை.. ஒரு தேர்தலையாவது சந்தித்தால் தான் அவர்கள் வாக்கு வங்கி தெரியும்.. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் எடுத்தவுடன் முதல்வராகவில்லை; படிப்படியாகவே வளர்ந்துள்ளனர்.. சினிமாவில் விஜய் சூப்பர் ஸ்டார்; ஆனால் அரசியலில் விஜய் புதியவர்" என்றார்.
ஓபிஎஸ், சசிகலா
மேலும், ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்த கேள்விக்கு, "அவர்கள் இருவரையும் அதிமுகவில் மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை என்பதை ஏற்கனவே திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டோம். அந்த நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications