ஜூலை 1 முதல் .. இபிஎப்ஓ, ஆதார், வருமான வரி, கிரெடிட் கார்டு விதிகளில் பெரிய மாற்றங்கள்
திருப்பூர்: ஆதார், பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, இபிஎப்ஓ விதிகளில் நாளை (ஜூலை ) முதல் மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளது. இதேபோல் வணிக சிலிண்டர் விலை மற்றும் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையிலும் மாற்றம் வரப்போகிறது. நாளை (புதன்கிழமை) முதல் வாகனங்களின் விலை மற்றும் வங்கிகளுக்கு ஆர்பியின் புதிய விதி உள்பட பல்வேறு மாற்றங்கள் வர உள்ளது. இதுபற்றி விரிவாக பார்ப்போம்.
பொதுவாக ஒவ்வொரு மூன்று மாதமும் நிதியாண்டின் காலாண்டு முடிவாகும். அந்த வகையில் ஏப்ரலில் ஆரம்பிக்கும் நிதியாண்டின் முதல் காலாண்டு இன்றுடன் முடிகிறது. ஜூலை 1 முதல் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு தொடங்கும் நாளாகும். காலாண்டு தொடங்கும் போது தான் வங்கி பரிவர்த்தனை உள்பட பல்வேறு மாற்றங்களை அமல்படுத்துவது வழக்கம். அந்த வகையில் மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஜூலை மாதத்தில் தான் வரி செலுத்துவோர் எவ்வித அபராதமும் இன்றி தங்களது வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசி மாதம் ஆகும்.

இ.பி.எஃப்.ஓ ஆன்லைன் சேவைகள் மீண்டும் தொடக்கம்
சிஸ்டம் மைக்ரேசன் மற்றும் தரவுத்தள ஒருங்கிணைப்பு காரணமாக ஐந்து நாட்கள் முடக்கப்பட்டிருந்த இ.பி.எஃப்.ஓ ஆன்லைன் சேவைகள், ஜூலை 1, 2026 அன்று நள்ளிரவு 00:00 மணி முதல் மீண்டும் செயல்பாட்டிற்கு வரவுள்ளன. இந்த மென்பொருள் மேம்பாட்டுப் பணி ஜூன் 26 நள்ளிரவு 00:00 மணி முதல் ஜூன் 30 இரவு 23:59 மணி வரை மேற்கொள்ளப்பட்டதால் ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது பலருக்கும் தெரியும்.
பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு
வெளிநாடுகளுக்கு செல்ல பயன்படுத்தப்படும் பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் நாளை முதல் மத்திய அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. நாளை முதல் பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல பாஸ்போர்ட்டுக்கான தட்கல் விண்ணப்ப கட்டணம் ரூ.3,500-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக கூடியுள்ளது. மைனர்களுக்கான (சிறாரான) 36 பக்க புத்தகம் (சாதாரண) ரூ. 1,000 இல் இருந்து ரூ. 1,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் (PCC) 500 இல் இருந்து 750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கார்கள் விலை உயர்வு
வாகனங்களை உற்பத்தி செய்யும் சில நிறுவனங்கள் தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்களின் விலையை 1.5 சதவீதம் முதல் வெவ்வேறு பிரிவுகளில் 3 சதவீதம் வரை உயர்த்தவுள்ளன. கிரெடிட் கார்டு விதிமுறைகளிலும் மாற்றங்கள் வரப்போகிறது. பல புதிய வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன. சில பரிவர்த்தனைகள் வெகுமதி புள்ளிகளின் (ரிவார்டு) வகையில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.
கிரெடிட் கார்டு
சில கிரெடிட் கார்டுதாரர்கள் 3 மாதத்துக்கு மூன்று முறை உள்நாட்டு விமான நிலைய 'லவுஞ்ச்'களை இலவசமாக பயன்படுத்த வழிவகை வழங்கியிருந்தது. இருப்பினும், இதற்காக அவர்கள் ஒவ்வொரு காலாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.60 ஆயிரம் செலவிடவேண்டும் என்று கட்டுப்பாடுகள் போட்டள்ளன.
வங்கிகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்
வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மியூச்சுவல் ஃபண்டுகள், இன்சூரன்ஸ் போன்ற நிதித் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்குத் தவறான முறையில் விற்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்கள் முழுப் பணத்தையும் திரும்பப் பெறவும் , அதனால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு பெறவும் தகுதியுடையவர்கள் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.
ITR-1 மற்றும் ITR-2 தாக்கல் செய்வதற்கான காலக்கெடு
தனிநபர் வரி செலுத்துவோர் ITR-1 மற்றும் ITR-2 விதிகளின் கீழ் தங்களது வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31, 2026 ஆகும். தாமதமாகத் தாக்கல் செய்வதற்கான அபராதங்களைத் தவிர்க்க, வருமான வரி இணையதளம் மூலம் உங்கள் கணக்கைத் தாக்கல் செய்யலாம்
ITR-1: வங்கி வட்டி மட்டுமே இதர வருமானமாகக் கொண்ட, மாதச் சம்பளம் வாங்கும் தனிநபர்களுக்கானது.
ITR-2: மியூச்சுவல் ஃபண்டுகள்/பங்குகள் (Stocks) வைத்திருப்பவர்கள், இரண்டாவது வீடு வைத்திருப்பவர்கள் அல்லது வருடத்திற்கு 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டுபவர்கள் நிரப்ப வேண்டிய படிவமாகும்.
சிலிண்டர் விலை மாற்றம்
வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி மாற்றுவதை எண்ணெய் நிறுவனங்கள் வழக்கமாக வைத்துள்ளன. அந்த வகையில் வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும், வணிக சிலிண்டர் விலையும் நாளை மாற்றப்பட வாய்ப்பு உள்ளது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் , சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.














Click it and Unblock the Notifications