டக்குன்னு எழுந்த எடப்பாடி.. சட்டசபையில் செங்கோட்டையனுக்காக வைத்த கோரிக்கை! கவனித்த அதிமுக தலைகள்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இப்போது பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே இன்று பள்ளிக்கல்வித் துறை தொடர்பாக விவாதம் நடந்த போது, செங்கோட்டையன் பேச வாய்ப்பு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். இரு தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகச் சொல்லப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி இதுபோல கோரிக்கை வைத்தது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தமிழக பட்ஜெட் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 14) நடைபெற்றது. தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இப்போது பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. அதில் தான் இன்று ஒரு சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

செங்கோட்டையன்
அதாவது அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவையில் நடந்த அதிமுக நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்கள் புறக்கணிக்கப்பட்டதாக செங்கோட்டையன் கூறிய நிலையில், அப்போது முதலே இரு தரப்பிற்கும் இடையே மோதல் தொடர்கிறது. சட்டசபை வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் கூட செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
சட்டசபையில் நடந்த சம்பவம்
ஒரு பக்கம் செங்கோட்டையன் அதிமுக கூட்டத்தைப் புறக்கணித்த நிலையில், மறுபுறம் சட்டசபையில் செங்கோட்டையன் பேசும்போது எல்லாம் எடப்பாடி பழனிசாமி அவையில் இருப்பதைத் தவிர்த்தார். இடையில் அவையிலேயே பல மூத்த அதிமுக தலைவர்கள் நேரடியாக செங்கோட்டையன் இருக்கைக்குச் சென்று பேசி, அவரை சமாதானம் செய்யவும் முயன்றனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் இருப்பதாகவே சொல்லப்பட்டது. இதற்கிடையே அவையில் இன்று நடந்த சம்பவத்தை வைத்துப் பார்க்கும்போது மோதல் சற்று முடிவுக்கு வந்துவிட்டதைப் போலவே தெரிகிறது.
எடப்பாடி கோரிக்கை
தமிழ்நாடு சட்டசபையின் 4ஆவது நாள் அமர்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு பட்ஜெட் மீதான பொது விவாதம் 2ஆவது நாளாக நடந்து வருகிறது. இதற்கிடையே சட்டசபையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச வாய்ப்பு தர வேண்டும் என சபாநாயகர் அப்பாவுவிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்தார்.
இன்று சட்டசபையில் பள்ளிக்கல்வித் துறை தொடர்பாகப் பேசப்பட்டது. அப்போது பள்ளிக்கல்வித் துறை குறித்து செல்லூர் ராஜு சில விஷயங்களைக் குறிப்பிட்டார். அதற்கான விளக்கத்தை துறை அமைச்சர் என்ற முறையில் அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்தார். அப்போது முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில், இந்த விவகாரத்தில் செங்கோட்டையன் பேச வாய்ப்பு தர வேண்டும் எனச் சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். இருப்பினும், நேரமின்மையைக் காரணம் காட்டி அந்த கோரிக்கையைச் சபாநாயகர் அப்பாவு நிராகரித்தார்.
எடப்பாடி- செங்கோட்டையன்
சபாநாயகர் நிராகரித்தாலும் எடப்பாடி- செங்கோட்டையன் இடையேயான உறவு மெல்ல சுமூகமாகி வருவதையே இது குறிக்கிறது. முன்னதாக நேற்றைய தினம் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத தீர்மானத்திலும் அதற்கு ஆதரவாகவே செங்கோட்டையன் வாக்களித்தார். மேலும், இன்று காலை செய்தியாளர்கள் இது குறித்துக் கேட்ட போதும் தாங்கள் ஒற்றுமையாகவே இருப்பதாகவும் யாராலும் தங்களைப் பிரிக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications