அதிமுகவுக்கு இனி விடிவுகாலம்தான்.. ஆனாலும் ஆதிக்கம் செலுத்தும் பாஜக.. பெங்களூர் புகழேந்தி
சென்னை: பாஜகவின் கூட்டணி முறிவு, அதிமுகவுக்கு ஒரு விடிவுகாலம் என்றே பார்ப்பதாக அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபைத் தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியிட்டு போட்டியிட்டது. நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன், 8 வழிச்சாலை, மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களாக தமிழகத்தில் பாஜக மீது மக்கள் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை, சட்டசபைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வென்றது

அதிமுக கூட்டணி
இந்த 4 தொகுதிகளும் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டால்தான் கிடைத்தது என விமர்சனங்கள் எழுந்தன. இது ஒரு புறமிருக்க, பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வி அடைந்தோம் என அதிமுக மூத்த நிர்வாகிகள் விமர்சனம் செய்தனர். விழுப்புரத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகமும் இதையே தெரிவித்திருந்தார்.

முன்னாள் நிர்வாகிகள்
அது போல் கடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அன்வர் ராஜா உள்ளிட்டோரும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி குறித்து எதிர் கருத்தை தெரிவித்திருந்ததாக சொல்லப்பட்டது. அது போல் முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி, அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி உள்ளிட்டோர் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறுவதை விரும்பவில்லை.

தமிழக பாஜக தலைவர்
இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல் நடந்ததாக பாஜக தலைவர் கே அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். அது போல் அவ்வப்போது அதிமுகவுக்கு மாற்று பாஜக என்ற கருத்தையே முன்னெடுத்து வந்தார்கள். மேலும் திமுக வெர்சஸ் பாஜக என்ற இடத்திற்கு உழைப்பதாகவும் சொல்லி வந்தனர்.

சட்டசபையில் அதிமுக
மேலும் அண்மையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனும் சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் குறித்து மிக கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். இவரை அழைத்து சென்றால் உள்ளதும் கெட்டு விடும் என பாஜக கருதி அதிமுக- பாஜக இட பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு அழைத்து செல்லவில்லை என கூறப்படுகிறது. அதிமுக மூத்த நிர்வாகிகள் பெரும்பாலானோருக்கு பாஜகவுடன் கூட்டணியை விரும்பவில்லை என தெரிகிறது.
Recommended Video

பெங்களூர் புகழேந்தி
இந்த நிலையில் நகர்ப்புற தேர்தலில் தனித்து போட்டி என பாஜக அறிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கூறுகையில் அதிமுகவுக்கு ஒரு விடிவுகாலம் என்றே இந்தக் கூட்டணி முறிவு என்ற முடிவை பார்த்தேன். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்கிறது என்பது பா.ஜ.க ஆதிக்கத்தின் கீழ்தான் அதிமுக இருக்கும் என்பதைக் காட்டுகிறது என புகழேந்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications