2016ல் ஆட்சியை பிடித்த போதும் டெபாசிட் போன அதிமுக.. காங்கிரஸ் கோட்டை விளவங்கோடு தொகுதியின் டேட்டா
சென்னை: குமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதி எப்போதும் காங்கிரஸ் கோட்டையாகவே விளங்கி வருகிறது. இங்கு அதிமுக, திமுக வெற்றி பெற்றதே இல்லை என்ற வரலாறும், கடந்த 2016 ஆம் ஆண்டில் அதிமுக டெபாசிட்டே இழந்ததும் குறிப்பிடத்தக்கது.
விளவங்கோடு தொகுதியின் எம்எல்ஏவாக மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்ற விஜயதாரணி காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார். விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. 2016-ல் அதிமுக ஆட்சியை பிடித்த போது இந்த தொகுதியில் டெபாசிட் இழந்து இருந்து இருக்கிறது இது பற்றிய விவரத்தை பார்க்கலாம்
கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் 3 முறை எம் எல் ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் விஜயதாரணி. தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொறடாவாவும் இருந்தார். இந்த நிலையில் சமீபகாலமாக காங்கிரஸ் மீது அதிருப்தி கொண்டார். இதனால் அவர் பாஜகவில் சேரப்போவதாக தகவல்கள் பரவின. டெல்லியிலேயே முகாமிட்டு இருந்த விஜயதாரணி இது பற்றி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் கூட பங்கேற்கவில்லை. இவர் வழக்கு விஷயமாக டெல்லியில் இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். இந்த நிலையில் விஜயதாரணி நேற்று திடீரென டெல்லியில் உள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்று, தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். இணைப்பு நிகழ்ச்சியின்போது, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கட்சித்தலைமைக்கு எழுதிய கடிதத்தை விஜயதாரணி காண்பித்தார்.
விஜயதாரணி கட்சி மாறியதன் காரணமாக, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை பாயும். அதன்படி, அவர் தனது எம்.எல்.ஏ பதவியை இழப்பார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் விஜயதாரணி இணைந்த நிலையில் அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
விஜயதாரணி கட்சி தாவியுள்ள நிலையில், அவர் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, எம்.எல்.ஏ பதவியை அவர் இழப்பார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சபாநாயகருக்கும் கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது. விஜயதாரணியின் எம் எல் ஏ பதவி பறிக்கப்பட்டால் அவரது விளவங்கோடு தொகுதிக்கு 6 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனால், லோக்சபா தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தப்படும் சூழலும் வரலாம் என்று கூறப்படுகிறது.
விஜயதாரணி வெற்றி பெற்ற விளவங்கோடு தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இருந்துள்ளது. இந்த தொகுதியில் திமுக ஒருமுறை கூட வென்றது இல்லை என்பது மட்டுமின்றி, அதிமுக கடந்த 2016ல் ஆட்சியை பிடித்த போதும், இந்த தொகுதியில் டெபாசிட்டையே பறிகொடுத்து இருந்தது. விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜயதாரணி 68,789 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பாஜக 2-வது இடத்தை பிடித்தது. அக்கட்சி வேட்பாளர் தர்மராஜ் 35,646 வாக்குகள் பெற்றார். மக்கள் நல கூட்டணி சார்பாக போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர் செல்லசுவாமி 25,281 வாக்குகளும் அதிமுக சார்பில் போட்டியிட்ட டுமீங் சேவியே ஜார்ஜ் 24,801 ஓட்டுகளும் பெற்று 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். அது மட்டும் இன்றி அதிமுகவிற்கு டெபாசிட்டும் போனது.












Click it and Unblock the Notifications