"தினகரனை சந்திக்கவே இல்லை!" செங்கோட்டையன் திடீர் விளக்கம்.. ஆனால் அடுத்து சொன்ன வார்த்தை முக்கியம்!
சென்னை: அதிமுகவில் இப்போது மீண்டும் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. இதற்கிடையே அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் எனப் பேசி வரும் செங்கோட்டையன் இன்று மதியம் அமமுக பொதுச்செயலாளர் தினகரனை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே இந்தத் தகவலை செங்கோட்டையன் மறுத்துள்ளார். டிடிவி தினகரனை தான் சந்திக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
அதிமுகவில் இப்போது மீண்டும் உட்கட்சி குழப்பம் வெடித்துள்ளது. அதிமுகவில் இருந்து வெளியேறிய அனைவரையும் மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியிருந்தார். இதனால் செங்கோட்டையனின் கட்சி பதவிகளைக் கூட எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார். கொஞ்ச நாட்கள் இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்த செங்கோட்டையன் இப்போது மீண்டும் காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளார்.

செங்கோட்டையன் தினகரன் சந்திப்பு?
அமமுக பொதுச்செயலாளர் தினகரனுடன் செங்கோட்டையன் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியானது.. சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிற்குச் சென்ற செங்கோட்டையன், அங்கு டிடிவி தினகரனை சந்தித்தாக கூறப்பட்டது. இரு தலைவர்களும் சுமார் 1 மணி நேரம் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
செங்கோட்டையன் மறுப்பு
இதற்கிடையே இது தொடர்பாகப் புதிய தலைமுறை சேனலுக்கு செங்கோட்டையன் விளக்கம் கொடுத்துள்ளார். டிடிவி தினகரனை சந்திக்கவில்லை என்று திட்டவட்டமாக மறுத்த செங்கோட்டையன், தனக்கு கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கம் என்றும் வேறு நோக்கம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார். மனைவி அங்கு இருந்ததால் அவரை பார்க்கவே சென்றதாகக் கூறிய அவர், டிடிவி தினகரனை சந்தித்தாக வெளியான தகவலைத் திட்டவட்டமாக மறுத்தார்.
நல்லதே நடக்கும்
கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது மட்டுமே தனது நோக்கம் என்றும் அவர் கூறினார். மேலும் அவர், "எல்லாம் நல்லதே நடக்கும் என்றே நினைக்கிறேன்.. கட்சியை ஒருங்கிணைக்க நான் முயற்சி செய்கிறேன். பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். நான் அமைதியாக இருக்கிறேன். நல்லது நடந்தால் தொண்டருக்கும் மகிழ்ச்சி, மக்களுக்கும் மகிழ்ச்சி" என்றார்.
மேலும், ஒபிஎஸ் தரப்பில் யாராவது சந்தித்தார்களா என்ற கேள்விக்கு, "கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என சொன்னதற்கு மட்டும் சந்தித்து நன்றி சொன்னார்கள். அதைத் தாண்டி எந்தவொரு சந்திப்பும் நடக்கவில்லை" என்று மட்டும் கூறினார்.
பாஜக கூட்டணி
தமிழ்நாட்டில் இப்போது என்டிஏ கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. அதிமுக பாஜக கூட்டணி உறுதியானாலும் கூட, முதலில் ஓபிஎஸ் தரப்பு கூட்டணியில் இருந்து விலகிவிட்டது. அதேபோல சமீபத்தில் தான் டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகியிருந்தார். இதையடுத்து டிடிவி தினகரனை நேரில் சந்தித்த மாஜி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மீண்டும் கூட்டணிக்கு வருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும், அந்தக் கோரிக்கையை டிடிவி தினகரன் நிராகரித்தார். இன்றைய தினம் இது தொடர்பாக அவர் மீண்டும் விளக்கமும் அளித்தார். அதாவது கூட்டணி குறித்த மறுபரிசீலனைக்கு அவசியம் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என்றும் கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் செங்கோட்டையன் டிடிவி தினகரன் இடையே சந்திப்பு நடந்தாக தகவல் வெளியான நிலையில், அதை செங்கோட்டையன் மறுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications