சட்டென கோட்டூர்புரம் ஓபிஎஸ் வீட்டிற்கே நேரடியாக போன செங்கோட்டையன்! 2 மணி நேரம் தீவிர ஆலோசனை!
சென்னை: அதிமுகவில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் நடந்து வருகிறது. பிரிந்து இருக்கும் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அப்போது தான் வெல்ல முடியும் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் சில வாரங்களுக்கு முன்பு பேசியிருந்தார். இதற்கிடையே செங்கோட்டையன், திடீரென மாஜி முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் மீண்டும் உட்கட்சி குழப்பம் வெடித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அங்குத் தொடர்ச்சியாக ஏற்பட்ட உட்கட்சி குழப்பம் ஒருவழியாக முடிவுக்கு வந்து, சில காலமாகப் பிரச்சினை எதுவும் இல்லாமல் போய்க் கொண்டு இருந்தது. இந்தச் சூழலில் தான் அங்கு மீண்டும் உட்கட்சி குழப்பம் உருவாகியிருக்கிறது.

செங்கோட்டையன்
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும் செங்கோட்டையன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதிமுக இதுபோல பிரிந்து இருப்பதால் தான் தேர்தலில் வெல்ல முடியவில்லை என்றும் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களைச் சேர்த்தால் நிச்சயம் வெல்ல முடியும் எனச் சொல்லி, இதற்காக 10 நாட்கள் கெடுவும் விதித்தார்.
இருப்பினும், பிரிந்து சென்றவர்களைச் சேர்க்க முடியாது என்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டவட்டமாக இருந்துவிட்டது. மேலும், கட்சியை ஒருங்கிணைக்கப்போவதாகச் சொன்ன செங்கோட்டையனின் கட்சி பதவிகளையும் பறித்து உத்தரவிட்டார். இடையில் செங்கோட்டையன் டெல்லிக்குப் போய் அமித் ஷாவை சந்தித்துத் திரும்பியிருந்தார். இதனால் அடுத்த அதிரடி சம்பவங்கள் நடக்கும் என்றே பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், அதுபோல எதுவும் நடக்கவில்லை.
ஓபிஎஸ் உடன் சந்திப்பு
செங்கோட்டையன் அமைதியாகவே இருந்தார். இதனால் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதில் சஸ்பென்ஸ் இருந்தது. இதனிடையே இப்போது செங்கோட்டையன் இப்போது அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது போலவே தெரிகிறது. அவர் இன்று மாலை மாஜி முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கோட்டூர்புரம் இல்லத்தில் இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. இருவரும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பின்னணி
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தான் முதல்வராக இருந்தார். அதன் பிறகு சசிகலா முதல்வராகும் சூழல் உருவான போது ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தத்தை நடத்தினார். சசிகலா சிறை சென்ற பிறகு, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இணைந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தொடர்ந்த சூழலில், ஓபிஎஸ் துணை முதல்வராக இருந்தார். 2021 சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, இருவருக்கும் இடையேயான பிரச்சினை மீண்டும் வெடித்தது. இதையடுத்து ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிடிவி தினகரன்
முன்னதாக நேற்றைய தினம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனையும் செங்கோட்டையன் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியானது. அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி தினகரனை சந்தித்து செங்கோட்டையன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், அந்தத் தகவலை செங்கோட்டையன் திட்டவட்டமாக மறுத்திருந்தார். ஆனால், இன்று ஓபிஎஸ் சந்திப்பு தொடர்பான செய்தியை இதுவரை செங்கோட்டையன் மறுக்கவில்லை.
மறுபுறம் செங்கோட்டையன் ஓபிஎஸை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தால் செங்கோட்டையன் கட்சியில் இருந்தே நீக்க வேண்டும் என எடப்பாடி ஆதரவாளர்கள் இணையத்தில் கருத்து சொல்லி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications