வரும் முன் காக்க அரசு கவனம் செலுத்தியிருந்தால்... சென்னையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது -அதிமுக
சென்னை: வரும் முன் காக்கும் வழிகளில் அரசு கவனம் செலுத்தியிருந்தால் சென்னையில் இத்தகைய மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்காது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஓரிரு நாள் மழைக்கே இந்த நிலை என்றால், இனி வரும் நாட்கள் எப்படி இருக்குமோ என அவர்கள் இருவரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மழை வெள்ளப்பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற அதிமுக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு முன் மாதிரியாக கொண்டு செயல்பட வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மக்கள் துயரம்
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை மாநகர வீதிகளில் ஆறு போல் தண்ணர் ஓடுவதையும், சென்னை நகரே குளம் போல் தண்ணீர் சூழ்ந்து காணப்படுவதையும் ஏழை எளிய, நடுத்தர மக்களின் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து அவர்கள் அல்லல் படுவதை பார்க்கும்போதும் மிகுந்த வேதனையும், துயரமும் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.

காகிதத்தோடு முடிந்தது
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வுக்கூட்டங்களை நடத்தியதாக ஊடகங்களில் செய்தி வந்த போதும், இப்போது ஏற்பட்டிருக்கும் நிலைமையை பார்த்தால் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் காகிதத்தோடு நின்றுவிட்டனவோ என்ற அச்சமும், ஐயப்பாடும் எழுவதாக அதிமுக தலைமை விமர்சித்துள்ளது. நிலைமையின் தீவிரம் உணர்ந்து அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட வேண்டும் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். கேட்டுக்கொண்டுள்ளனர்.

வேகம்-விவேகம்
தமிழக அரசு விவேகத்துடனும், விரைந்தும் செயல்பட வேண்டும் என்றும் மக்களின் உயிரும் உடைமையும் வாழ்வாதாரமும் காக்கப்பட வேண்டும் என்பதே தங்களின் வலியுறுத்தல் எனவும் அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர். மழைக்காலங்களில் மின் கசிவு ஏற்படுவதை தடுக்கவும், மின் கம்பிகள் அறுந்து விழாத வகையிலும் மின்சாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் கூட்டறிக்கை வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதல்வர் ஆய்வு
இதனிடையே நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் காலை முதலே, முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று ஆய்வு செய்து வருகிறார். மேலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் நேரில் பார்வையிட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications