"ஆளுநர் தேநீர் விருந்து.. அவங்க புறக்கணிக்கட்டும்.. நாங்கள் கலந்து கொள்வோம்!" சொல்கிறார் ஜெயக்குமார்
சென்னை: ஆளுநர் இன்று மாலை அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக அதிமுக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே தொடக்கம் முதலே சுமுகமான உறவு இல்லை. இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது.
தமிழக அரசின் எந்தவொரு மசோதாக்களுக்கும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளிப்பதில்லை என்று தொடர்ந்து கூறப்படுகிறது.

கட்சிகள் புறக்கணிப்பு
நீட் விலக்கு உட்பட மொத்தம் 11 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே இன்றைய தினம் மாலை ஆளுநர் சார்பில் தேநீர் விருந்து அளிக்கப்பட இருந்தது. ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவது இல்லை என்று ஏற்கனவே இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மமக ஆகிய கட்சிகள் அறிவித்து இருந்தன. இந்தச் சூழலில் ஆளுநர் ரவியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியம் சந்தித்தனர்.

தேநீர் விருந்து
இதையடுத்து ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டசபை மாண்பைச் சீர்குலைக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டு வருவதால் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாகத் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தேநீர் விருந்தில் அதிமுக கலந்து கொள்ளும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சரியானது இல்லை
இது குறித்து ஜெயக்குமார் மேலும் கூறுகையில், "இன்று மாலை தேநீர் விருந்து மட்டுமில்லை.. பாரதியார் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதிலும் பங்கேற்க மாட்டோம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது ஏற்றுக் கொள்ள முடியாதது. தமிழ்ப் புத்தாண்டை ஓட்டி ஆளுநர் விருந்தை அளிக்கிறார். புத்தாண்டிற்கு விருந்து அளிப்பது தமிழ் கலாச்சாரம். ஆளுநர் மாளிகையில் இருந்து இதுபோன்ற நிகழ்வு நடத்தப்படும் போது, தமிழ்ப் பற்றாளர் என்ற முறையில் கலந்து கொள்வது தான் சரியானதாக இருக்கும்.

நீட் விலக்கு
தேர்தல் காலத்தில் நீட் குறித்து திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தார். திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீட் ஒழிக்கப்படும் என்று சொன்னார்கள். இதற்கான சூட்சமம் எல்லாம் கூட தங்களுக்குத் தான் தெரியும் என்றார்கள். ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழித்துவிடுவோம் என்றார்கள். பிறகு ஏன் அவர்கள் இதைச் செய்யவில்லை. நீட் விலக்கு பெறாமல் சாக்குப்போக்கு சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
Recommended Video

அதிமுக கலந்து கொள்ளும்
சன்னா ரெட்டி ஆளுநராக இருந்த சமயத்தில் அவர் நாட்டின் அரசியலமைப்பு விதிகளை மீறிச் செயல்பட்டார். இதனால் அப்போது மாநில உரிமைகள் கருதி சில முடிவுகளை எடுத்தார். ஆனால், திமுக அப்படியில்லை. ஆளுநர் தங்களுக்கு இணக்கமாகச் செயல்படும்போது வேண்டும் என்கிறார்கள். வேண்டாம் என்றால் வேறு மாதிரி பேசுவார்கள்" என்று அவர் தெரிவித்தார். மேலும் ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக கலந்து கொள்ளும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications