சென்னையில் போரூர் டூ பூந்தமல்லி.. வரப்போகுதே நல்ல செய்தி.. பிரம்மாண்டத்தை நீங்களே பாருங்க
சென்னை: சென்னையில் போரூர் முதல் பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் பணிகள் பெருமளவு முடிந்துவிட்டது. அனேகமாக இந்த ஆண்டு இறுதியில் சோதனை ஓட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் போரூர் மற்றும் பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் ஓடுவதற்கு அதிக வாய்ப்பும் இருக்கிறது. இந்நிலையில் போரூர் மற்றும் பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் பாதை குறித்து ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலை பொறுத்தவரை, சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், திருவொற்றியூர் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும் இரண்டு வழித்தடங்களில் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தினம் தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணிக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு சுமார் 90 லட்சம் பேர் வரை இப்போது பயணிக்கிறார்கள். மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆரம்பத்தில் கட்டணம் அதிகம் என்று நினைத்த பலர் இப்போது சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு மெட்ரோ ரயில் தான் சிறப்பான போக்குவரத்தாக இருக்கும் என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஏனெனில் எல்லா நேரமும் சென்னை மெட்ரோவில் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக சென்னை மெட்ரோவில் பயணிப்போரின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-ல் 116.1 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் வழித்தடம் 3 மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ நீளத்தில் 19 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 28 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் வழித்தடம் 4ஐ பொறுத்தவரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனை வரை 26.1 கி.மீ நீளத்தில்18 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 9 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது. வழித்தடம் 5ஐ பொறுத்தவரை மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 44.6 கி.மீ நீளத்தில் 39 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது. எல்லா வழித்தடமும் ஐடி ஊழியர்கள், பெரு நிறுவனங்களில், தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரவேற்பு நிச்சயம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Aerial view of metro works on Porur- Poonamallee stretch. Year end finish possible?? Ⓜ️🚊
— Chennai Updates (@UpdatesChennai) February 10, 2025
P.C : Gritharan Elangovan (IG) pic.twitter.com/xccbAp0NP7
இந்த 3 வழித்தடங்களில் பணிகள் முடிந்த பின், 138 ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் இயக்க முடிவு செய்திருக்கிறது. தற்போது மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்பு பணி ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 4-வது வழித்தடத்தின் ஒரு பகுதியான பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தை பொறுததவரை பணிகள் மிகவேமாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
அனேகமாக இந்த ஆண்டு இறுதியில் பூந்தமல்லி - போரூர் வரையான பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் ஓடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த அளவிற்கு பணிகள் அங்கு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் பூந்தமல்லி - போரூர் இடையே நடந்து வரும் பணிகள் குறித்து ட்ரோன் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பிரம்மாண்டமான கட்டுமானங்களும், ரயில் பணிகளும் எப்படி நடக்கிறது.. எந்த அளவிற்கு நடந்து முடிந்துள்ளது என்பது குறித்த தெரிகிறது. இதை பார்க்கும் போது நிச்சயம் பூந்தமல்லி, போரூர் பகுதி மக்கள் விரைவில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications