அடுத்தடுத்து பாராட்டு.. அண்ணாமலையை தொடர்ந்து திமுக அரசை பாராட்டிய பொன்னார்.. ஆச்சர்ய பேச்சு
சென்னை: ஆட்சிக்கு வந்து கடந்த 100 நாட்களில் முதல்வர் மு. க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நேற்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னை மயிலாப்பூரில் துவங்கி வைத்தார். இந்த திட்டம் தமிழ்நாடு முழுக்க பரவலான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த திட்டத்தை வரவேற்று பேசினார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை வரவேற்கிறோம்
பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது பாராட்டுக்குரியது. திமுக ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகியுள்ளது. இதில் நல்ல அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்பு வழங்கி ஆட்சி நடத்தி வருகிறார்கள். எந்த ஒரு ஆட்சிக்கும் 6 மாதம் அவகாசம் தர வேண்டும் என்று திமுக ஆட்சியை பாராட்டும் வகையில் பேசி இருந்தார்.

திட்டங்கள்
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் திமுக அரசை பாராட்டினார். அதில், திமுக தேர்தல் வாக்குறுதியின்படி தற்போது பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு பாராட்டப்பட வேண்டியது. ஆட்சிக்கு வந்து கடந்த 100 நாட்களில் முதல்வர் மு. க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

மேலும் திட்டங்கள்
திமுக அரசு ஏராளமான வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றி உள்ளது. இனியும் திமுக அரசு மேலும் பல திட்டங்களை நிறைவேற்றும் என்று நம்புகிறேன். அடுத்த 100 நாட்களில் திமுக அரசு மேலும் பல முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதிமுக பாஜக கூட்டணி எப்போதும் போல் இருக்கிறது.

உள்ளாட்சி தேர்தல்
கூட்டணி எப்போதும் போல வலிமையான கூட்டணியாக இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்காக நாங்கள் தயாராகி வருகிறோம். அதிமுக-பாஜக கூட்டணி தொடரும். உள்ளாட்சி தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வோம். வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிகப்படியான இடங்களில் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெறும்.
Recommended Video

ஆலோசனை
தேர்தல் குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை செய்து முடிவுகளை எடுப்போம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டு இருக்கிறார். திடீரென திமுக ஆட்சி குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டி பேசி இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்றுதான் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சியை பாராட்டி பேசினார். இந்த நிலையில் தற்போது பொன்.ராதாகிருஷ்ணனும் திமுக ஆட்சியை பாராட்டி பேசி உள்ளார்.












Click it and Unblock the Notifications